2016-12-25 10:53:00

கிறிஸ்மஸ் விழா இரவு திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


டிச.25,2016. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் டிசம்பர் 24, இரவு, 9.30 மணிக்கு ஆற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

அன்பு சகோதர, சகோதரிகளே, "மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது." (தீத்து 2:11) திருத்தூதர் பவுலின் வார்த்தைகள், இந்த இரவின் மறையுண்மையை வெளிப்படுத்துகிறது.

இந்த இரவு, மகிமையின் இரவு. அந்த மகிமையை, வானதூதர்கள் பெத்லகேமில் பறைசாற்றினர். இந்த இரவு, மகிழ்வின் இரவு. ஏனெனில், இறைவனை, இனி, வானங்களிலும், ஆழ்ந்த தியானக் கருத்துக்களிலும் தேடாதவண்ணம், நம்மருகே மனிதராக வந்து சேர்ந்தார்.

"ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்" (எசாயா 9:5) என்ற வார்த்தைகளின் பொருளை, இடையர்கள் உணர்ந்துகொண்டனர். "குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" (லூக்கா 2:12) என்று வானதூதர் சொன்னதை, அவர்கள் எளிதாகப் புரிந்துகொண்டனர்.

வானதூதர் தந்த இந்த அடையாளம், அன்று மட்டுமல்ல, இன்றும் உண்மை. கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் உண்மையில் கொண்டாட வேண்டுமெனில், இந்த அடையாளத்தைத் தியானிக்க வேண்டும். வலுவற்ற ஒரு குழந்தையில் இறைவன் இருக்கிறார் என்ற அடையாளத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அடையாளத்தின் வழியே, நற்செய்தி ஒரு புதிரை வெளிப்படுத்துகிறது: அனைத்து வலிமையையும் கொண்ட ஒரு பேரரசர், ஓர் அரண்மனையில் இல்லை, மாறாக, ஒரு தீவனத் தொட்டியில் இருக்கிறார்.

இந்தக் குழந்தையைக் காண, அவர் இருக்கும் இடத்திற்கு சென்று, நம்மையே அவருக்கு முன் தாழ்த்தவேண்டும். தீவனத் தொட்டியில் இருக்கும் குழந்தை நமக்கு விடும் சவாலை ஏற்க துணிவோம்.

வசதியான படுக்கைகளில், தாயின் அரவணைப்பில் உறங்கும் குழந்தை அல்ல இது. மாறாக, ஆபத்தானச் சூழல்களில், குண்டுத்தாக்குதல்களுக்குப் பயந்து, பூமிக்கடியில் ஒளிந்திருக்கும் குழந்தையின் வடிவில்,  அளவுக்கதிகமான அகதிகள் நிறைந்திருக்கும் பாதுகாப்பற்ற ஒரு படகில் படுத்திருக்கும் குழந்தையின் வடிவில் இறைவன் நமக்குச் சவால்கள் விடுகிறார்.

பிறப்பதற்கு அனுமதியின்றி, கருவிலேயே கொல்லப்படும் குழந்தையின் வடிவில், ஆயுதங்களை வாங்குவதற்கு அளவற்ற பணம் இருக்கும் சூழலில், தன் பசியைப் போக்க முடியாமலும், தன் மகிழ்வுக்கு விளையாட்டுப் பொருள்கள் இல்லாமலும் அழும் குழந்தையின் வடிவில் இறைவன் நமக்குச் சவால்கள் விடுகிறார்.

கிறிஸ்மஸ் விழா, நம்பிக்கையையும், மகிழ்வையும் தரும் விழா எனினும், அதற்குள் பல துயரங்கள் பொதிந்துள்ளன. மரியாவுக்கும், யோசேப்புக்கும் விடுதியில் இடம் இல்லாததால், அவர்கள் இயேசுவை தீவனத் தொட்டியில் கிடத்தவேண்டியதாயிற்று. அன்று நிலவிய அக்கறையற்ற நிலை, இன்றும் தொடர்கிறது. கிறிஸ்மஸ் விழாவில், இயேசுவை மையப்படுத்தாமல், நம்மை மையப்படுத்தி நாம் விழா கொண்டாடுகிறோம்.

இருப்பினும், கிறிஸ்மஸ் விழா நம்பிக்கையின் விழா. "அப்பத்தின் வீடு" என்று பொருள்படும் பெத்லகேமில் இயேசு பிறந்ததால், தானே பிறருக்கு அப்பமாக மாறுவதைச் சொல்லாமல் சொல்கிறார்.

இக்குழந்தை கொண்டுவந்த நம்பிக்கையை இடையர்கள் புரிந்துகொண்டனர். இந்த இடையர்களோடு இணைந்து நாமும் பிறந்துள்ள இயேசுவின் அருகே செல்வோம். அன்னை மரியா, யோசேப்பு, இடையர்கள் அனைவரோடும் இணைந்து, இந்த மாபெரும் மறையுண்மையை உணர முயல்வோம். ‘நன்றி இறைவா, நன்றி. இவை அனைத்தையும் எனக்காகச் செய்துள்ளீர்’ என்று குழந்தை இயேசுவிடம் சொல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.