2016-12-23 14:44:00

CL பிறரன்பு அமைப்பின் உதவிகளுக்கு திருத்தந்தை நன்றி


டிச.23,2016. இத்தாலிய கத்தோலிக்க பிறரன்பு இயக்கம் ஒன்று, திருஅவையின் பிறரன்புப் பணிகளுக்கு வழங்கியிருக்கும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வியக்கத்தின் தலைவருக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பொதுவாக CL என்றழைக்கப்படும், உடன்பிறந்த குழு உறவு மற்றும் விடுதலை இயக்கத்தின் (Fraternity of Communion and Liberation) தலைவர் அருள்பணி ஜூலியன் காரோன் (Julián Carrón) அவர்களுக்கு, கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடன், நன்றியையும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.. 

திருத்தந்தை, கைப்பட எழுதியுள்ள இக்கடிதம் குறித்து மகிழ்வுடன் தெரிவித்துள்ள, அருள்பணி காரோன் அவர்கள், உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்குத் துணிச்சலுடன் தொடர்ந்து சான்று பகர வேண்டுமென்று, திருத்தந்தை, CL இயக்கத்தினரைக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், அன்னை மரியா திருத்தலங்களுக்கு, இந்த அமைப்பினர் மேற்கொண்ட திருப்பயணங்களின்போது திரட்டப்பட்ட நிதி, திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கென வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் Venegonoல், இறையியல் பேராசிரியராகப் பணியாற்றிய அருள்பணி Luigi Giussani அவர்கள், மாணவர் உலகத்தில், கிறிஸ்தவ பிரசன்னத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில், 1954ம் ஆண்டில், இந்த CL இயக்கத்தை உருவாக்கினர். தற்போது இந்த இயக்கத்தில், 64  நாடுகளைச் சேர்ந்த, 47,994 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆப்ரிக்காவில் 9, ஆசியாவில் 7, ஐரோப்பாவில் 28, மத்திய கிழக்கில் 3, வட அமெரிக்காவில் 7, ஓசியானியாவில் 1, தென் அமெரிக்காவில் 9 என, CL இயக்கம் செயல்பட்டு வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.