2016-12-22 15:57:00

மேலானப் பரிசாக தன்னையே வழங்கிய இறைமகனின் விழா


டிச.22,2016. பரிசுகளைப் பற்றி நம்மை அடிக்கடி சிந்திக்கவைக்கும் கிறிஸ்மஸ் காலம், அனைத்திற்கும் மேலான சிறந்தப் பரிசாக இவ்வுலகிற்கு வந்த இறைமகன் இயேசுவைப் பற்றி சிந்திக்க நம்மை அழைக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்ட ஒரு கூட்டத்தில் கூறினார்.

வத்திக்கானில் பணியாற்றுவோர், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அடங்கிய 5000த்திற்கும் அதிகமானோரை அருளாளர் 6ம் பவுல் அரங்கத்தில், இவ்வியாழன் மதியம் சந்தித்தத் திருத்தந்தை, கூடியிருந்த அனைவருக்கும் தன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைக் கூறினார்.

வத்திக்கானில் பணியாற்றும் அனைவருக்கும் கிடைத்துள்ள ஒரு முக்கிய பரிசு, அவர்கள் செய்யும் தொழில் என்று கூறியத் திருத்தந்தை, இத்தாலியிலும் இன்னும் உலகின் பல நாடுகளிலும் வேலையின்றி தவிக்கும் மக்களை நினைவுகூரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பல நாடுகளில், ஆபத்தானச் சூழல்களில் தொழில் செய்வோர், செய்யும் தொழிலுக்கு ஏற்ற ஊதியம் பெறாதோர், போர்கள் மற்றும் மோதல்களால் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து தவிப்போர் ஆகிய அனைவரையும் எண்ணிப்பார்க்கவேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

நாம் நிறைவு செய்துள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டில், வத்திக்கான் ஊழியர்கள் அனைவரோடும் தான் புனிதக்கதவு வழியே சென்ற தருணத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பெற்றுக்கொண்ட பரிபூரண பலன்கள், நம் வழியே இன்னும் தொடரவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

கூடியிருக்கும் அனைவருக்கும், குறிப்பாக, அவர்கள் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள், மற்றும் வயது முதிர்ந்தோர், நோயுற்றோர் ஆகிய அனைவருக்கும் தன்  வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பாக விண்ணப்பித்து, அனைவருக்கும் தன் ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.