2016-12-22 15:44:00

மாற்றங்களை உருவாக்கும் இறைவனை வரவேற்கும் விழா


டிச.22,2016. நம் அறிவுசார்ந்த எதிர்பார்ப்புக்களை தலைகீழாக மாற்றி, இறைவன், தன் அன்புகலந்த பணிவை வெளிப்படுத்தும் விழா, கிறிஸ்மஸ் விழா என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த வத்திக்கான் அதிகாரிகளிடம் கூறினார்.

வத்திக்கானில் இயங்கிவரும் அனைத்துத் துறைகளையும் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றுவோர் அனைவரையும் உள்ளடக்கிய Roman Curia என்ற குழுவைச் சேர்ந்தவர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து, கிறிஸ்மஸ் விழா வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

"இறைவன் என்ற வடிவில் அளவற்றவராக இருப்பவர், அடிமை என்ற வடிவில் தன்னையே மிகச் சிறியவராக மாற்றினார்" என்று புனித அகஸ்டின் கூறிய வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்  உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

நம் எதிர்பார்ப்புக்களையும், எண்ணங்களையும் ஏமாற்றும் வகையில் மாற்றங்களை உருவாக்கும் இறைவனை, நாம், கிறிஸ்து பிறப்பு விழாவில் வரவேற்கிறோம் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

"தனது மாட்சிமை, மேன்மை ஆகியவற்றைக் கொண்டு நம்மை பிரமிப்பில் ஆழ்த்துவதற்குப் பதில், நம்மை அன்பு கூர்வதால், மிகச் சிறிய குழந்தையாக இயேசு நம்மிடையே வந்தார்" என்று அருளாளர் 6ம் பவுல், 1971ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவன்று கூறியதையும், திருத்தந்தை பிரான்சிஸ், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

Roman Curiaவின் ஆண்டு கூட்டமான இன்று, இதுவரை வத்திக்கான் துறைகளில் நிகழ்ந்துள்ள மறுசீரமைப்பு முயற்சிகளைப் பற்றி தான் பகிர்ந்துகொள்ள விரும்புவதாக திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

"சிதைந்ததைச் சீர்படுத்த, சீர்படுத்தியதை ஒழுங்கமைக்க, ஒழுங்கமைக்கப்பட்டதை வலுப்படுத்த, வலுப்படுத்தியதை உருமாற்றி, உறுதிப்படுத்த" என்று புனித இஞ்ஞாசியார் தன் ஆன்மீகப் பயிற்சிகளில் கூறிய வழிமுறையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

Roman Curia என்பது, அசைக்கமுடியாத, மாற்றமுடியாத ஓர் அதிகார கட்டமைப்பு அல்ல என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, மாற்றங்கள் உருவாவது, உயிரோட்டத்திற்கு அறிகுறி என்று தெளிவுபடுத்தினார்.

வத்திக்கானில் உருவாக்கப்படும் மாற்றங்கள், ஒப்பனைக்காக செய்யப்படும் மாற்றங்கள் அல்ல, மாறாக, இங்கு நிலவும் குறைகளை போக்கும் முயற்சிகள் என்று கூறியத் திருத்தந்தை, பணியாற்றுவோரை மாற்றம் செய்வதால் மட்டும் மாற்றங்கள் வந்துவிடாது என்றும், உள்ளார்ந்த மனமாற்றங்களால் விளையும் மாற்றங்களே நிலைத்திருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

கடந்த ஈராண்டுகள் நிகழ்ந்த ஆண்டுநிறைவு கிறிஸ்மஸ் கூட்டங்களில், திருஅவைக்குள் நிலவும் நோய்கள் குறித்து பேசியபின், இப்போது, அந்நோய்களை நீக்கும் வழிகள் குறித்து சிந்திக்க வந்திருக்கிறோம் என்று திருத்தந்தை கூறினார்.

மாற்றங்கள் உருவாகும்போது, அதற்கு எதிர்ப்புக்களும் தடை முயற்சிகளும் எழுவது இயற்கை என்று கூறியத் திருத்தந்தை, உயிரற்றனவற்றில் உருவாகும் மாற்றங்களில் மட்டுமே எதிர்ப்புக்களும் தடை முயற்சிகளும் எழாது என்று குறிப்பிட்டு, இத்தகைய எதிர்ப்புக்கள் வத்திக்கானிலும் நிகழ்வது, இங்கு உயிரோட்டம் உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது என்று கூறினார்.

Roman Curiaவில் நிகழும் மாற்றங்கள், செபத்தின் வலிமையை சார்ந்து இருக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாற்றங்கள், மேய்ப்புப்பணி அக்கறை, மறைபரப்புப்பணிக்குத் தேவையான மனநிலை, நவீன வழிமுறைகள், கூட்டுறவு, ஆகியவை உட்பட 12 கொள்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தன் உரையில் விளக்கிக் கூறினார்.

Roman Curiaவில் மாற்றங்களைக் கொணர்வது, ‘கான்கிளேவ்’ துவங்குமுன்னர் நிகழ்ந்த கர்தினால்கள் அவை தனக்குத் தந்த பணி என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்தப் பணிக்கு உதவியாக C9 கர்தினால்கள் அவை உருவாக்கப்பட்டதிலிருந்து, திருப்பீடத்தில்  மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை பட்டியலிட்டுக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.