2016-12-22 16:23:00

"எந்தக் குழந்தையையும் அலட்சியப்படுத்தக் கூடாது"


டிச.22,2016. Save the Children என்ற குழந்தைகள் நல அமைப்பு, கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, உலகக் குழந்தைகள் நலனை மையப்படுத்தி, ஒரு காணொளிச் செய்தியை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.

"எந்தக் குழந்தையையும் அலட்சியப்படுத்தக் கூடாது, குறிப்பாக கிறிஸ்மஸ் காலத்தில்" என்ற கருத்து வரிகள் அடங்கிய இந்த காணொளியில், கணவனும் மனைவியும் தங்கள் ஒரே மகளுடன் கிறிஸ்மஸ் விருந்துண்ண அமர்ந்திருக்கும்போது, அச்சிறுமியைச் சற்றும் கவனிக்காமல், பெற்றோர் இருவரும் தங்கள் செல்லிடப் பேசி, கையடக்கக் கணனி இவற்றில் கவனம் செலுத்துவதுபோல் இக்காணொளி ஆரம்பமாகிறது.

இதைத் தொடர்ந்து, அந்த விருந்து மேசையிலிருந்து எழுந்து செல்லும் சிறுமி, தன் அறையில் மற்றொரு சிறு மேசையை உருவாக்கி, அங்கு தனியே அமர்ந்து உண்ணப்போகும் வேளையில், பெற்றோர் அச்சிறுமியுடன் இணைவதுபோல் இந்தக் காட்சி நிறைவடைகிறது.

குழந்தைகளை மையப்படுத்திய கிறிஸ்மஸ் விழாவின்போது "எந்தக் குழந்தையையும் அலட்சியப்படுத்தக் கூடாது" என்ற செய்தியை Save the Children நிறுவனம் இக்காணொளி வழியே வெளியிட்டுள்ளது.

1919ம் ஆண்டு நிறுவப்பட்ட Save the Children அமைப்பு, குழந்தைகள் நலனில், குறிப்பாக, ஆபத்தானச் சூழல்களில் வாழும் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.