2016-12-21 15:27:00

வெளி ஆடம்பரங்கள் கிறிஸ்மஸ் விழாவில் நிறைவைக் கொணராது


டிச.21,2016. ஜெர்மன் நாட்டிலும், துருக்கியிலும் நிகழ்ந்த வன்முறைக் கொலைகள் நம்மை ஆத்திரமடையச் செய்தாலும், அமைதியின் இளவரசரான குழந்தை இயேசுவிடம் இறந்தோர் அனைவருக்காகவும் மன்றாடுவோம் என்று, இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆஞ்சேலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள், இச்செவ்வாய் மாலை வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார்.

கிறிஸ்மஸ் பெருவிழாவின் ஓர் அங்கமாக, இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, உரோம் நகரின் அன்னை மரியா பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்திய கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், நாம் கொண்டாடும் விழாக்களின் வெளி ஆடம்பரங்கள் மட்டுமே நம் வாழ்வில் நிறைவைக் கொணராது என்பதை, நம்மைச் சுற்றி நடக்கும் துயர நிகழ்வுகள் நினைவுபடுத்துகின்றன என்று கூறினார்.

விழாக்களும், கொண்டாட்டங்களும் நம்மை மட்டும் திருப்தியடையச் செய்யும் வண்ணம் கொண்டாடப்படுவது ஆபத்து என்றும், அயலவரை இணைத்து, அவர்கள் தேவைகளை நிறைவு செய்து மேற்கொள்ளப்படும் கொண்டாட்டங்களே பொருள் தரும் என்றும், கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் கற்றுக்கொள்வது அவசியம் என்று, கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.