2016-12-20 16:15:00

மும்பை உயர்மறைமாவட்டத்திற்கு இரு புதிய துணை ஆயர்கள்


டிச.20,2016. இந்தியாவின் மும்பை உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்கள், Allwyn D’Silva, Barthol Barretto ஆகிய இருவரையும், அவ்வுயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர்களாக, இச்செவ்வாயன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1948ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிறந்த, புதிய துணை ஆயர் Allwyn D’Silva அவர்கள், 1975ம் ஆண்டு, அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். மும்பை பல்கலைக்கழகத்தில், அரசியல் அறிவியலில், முதுகலைப்பட்டம் பெற்றுள்ள இவர், மும்பை புனித பயஸ் கல்லூரியில், 31 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர், உள்ளூரிலும், மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலும் மனித உரிமைகள் காக்கப்பட தீவிரமாக உழைத்து வருபவர்.

சமூக நிர்வாக ஆய்வு நிறுவன இயக்குனர், Jagruti Kendraவை உருவாக்கியவர், மற்றும், அதன் இயக்குனர், தெற்கு ஆசிய மனித உரிமைகள் கல்வி அமைப்பின் தலைவர், மும்பை மனித உரிமைகள் கல்விக் குழுவின் தலைவர், ஆசிய, நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் உறுப்பினர்... இப்படி பல்வேறு பொறுப்புக்களை வகித்து வருபவர், மும்பை புதிய துணை ஆயர் Allwyn D’Silva. இவர், CPCI மனித உரிமைகள் விருது, உலக அமைதி இயக்க அறக்கட்டளை விருது, பத்திரிகையியல் மற்றும் Golden Pen விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும், மும்பையின் மற்றொரு புதிய துணை ஆயாகிய Barretto Barthol அவர்கள், 1961ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பிறந்தவர். இவர், 1989ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். இவர் பங்குக் குருவாகவும், தல முதன்மைக் குருவாகவும் பணியாற்றி வந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.