2016-12-19 16:11:00

செவிமடுப்பதும், புரிந்து பதிலளிப்பதும், சமூகத் தொடர்பு விதி


டிச.19,2016.  இயற்கையின் இரும்புப்பிடிச் சட்டங்களுக்கு மாறாக நாம் செல்ல இயலாது என்பது உண்மையாயினும், இறைவனின் உதவியுடன் எதுவும் கைகூடும் என்பதற்கு இத்திங்களின் திருப்பலி வாசகங்கள் இரண்டும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக உள்ளன என மறையுரையாற்றினானார், சமூகத்தொடர்புகள் திருப்பீடச் செயலகத்தின் தலைவர் அருள்பணி Dario Viganò.

திருப்பீடத்தின் சமூகத்தொடர்புத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும், இத்திங்கள் காலையில், தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய அருள்பணி விகனோ அவர்கள், சிம்சோனின் பெற்றோருக்கு வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளப்பேறு குறித்த அறிவிப்பு வந்ததையும், அதேப்போன்று, வயது முதிர்ந்த காலத்தில் திருமுழுக்கு யோவானின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டதையும் பற்றிய இத்திங்கள் வாசகங்களை மேற்கோள்காட்டி, இறைவன் மீது கொள்ளும் நம்பிக்கை நற்பயனையேத் தரும் என்றார்.

இறைவனின் இதயத்தைத் திறக்கவல்ல எளிதான சாவி என்பது நம் செபங்களே என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் இம்மறையுரையின்போது நினைவுபடுத்திய அருள்பணி விகனோ அவர்கள், செபத்தில் ஒன்றிணையாத மனம், மறுபுறம் சாய்ந்து, பணம், அதிகாரம் போன்றவற்றில் மூழ்குமானல், நற்செய்தி அறிவிப்பும், மன மகிழ்வும், காணாமல்போய்விடும் என்றார்.

இறைவனின் வார்த்தைக்கு செவிமடுப்பவராலேயே அதற்கு பதிலளிக்கவும் முடியும், ஏனெனில், சமுகத்தொடர்பின் விதியே, செவிமடுத்தல், புரிந்துகொள்ளுதல் மற்றும் பதிலளித்தல் என்பதாகும் எனவும் கூறினார் அருள்பணி விகானோ.

சிம்சோனின் பிறப்பிற்கு முன் அவரது தாய்க்கு இறைவன் வழங்கிய கட்டளைகளை அந்த தாய் கடைப்பிடித்ததுபோல், சிம்சோனும் தன்வாழ்வில் அதனைக் கடைப்பிடித்தார், ஆனால், அவர் இறைவனின் கட்டளைகளை மீறியபோதிலும், இறைவன் அவரிடமிருந்து தன் கொடைகளைத் திரும்பப் பெறாமல், அவரை மன்னித்து அவர் அனுப்பப்பட்ட பணியை நிறைவேற்ற உதவினார் என, தன் மறையுரையில் மேலும் கூறினார், அருள்பணி விகனோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.