2016-12-17 16:01:00

திருத்தந்தைக்கு கர்தினால்கள் செபம்


டிச.17,2016. அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள பவுலின் சிற்றாலயத்தில், இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய எண்பதாவது பிறந்த நாள் திருப்பலியின் தொடக்கத்தில், திருத்தந்தைக்கு,  நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ.

கர்தினால்கள் அவைத் தலைவர், கர்தினால் சொதானோ அவர்கள், கர்தினால்கள் சார்பாக, திருத்தந்தைக்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, திருத்தந்தைக்காக, கர்தினால்கள் தொடர்ந்து செபிப்பதாகவும் உறுதி கூறினார்.

உயிர்த்த இயேசு, தம் சீடர்களுக்கு காட்சியளித்தபோது, பேதுருவிடம், யோனாவின் மகன் சீமோனே, இவர்கள் எல்லாரையும்விட நீ என்னை அதிகம் அன்பு கூருகிறாயா எனக் கேட்டார், ஆம் ஆண்டவரே, உம்மை அன்பு கூர்கிறேன் என்பது உமக்குத் தெரியும் என்ற பேதுரு கூறிய அதே அன்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பணியை ஆற்றி வருகிறார், அவருக்கு, கர்தினால்கள் எப்போதும், குறிப்பாக, இந்த அழகான நாளில், நெருக்கமாக இருக்கிறோம் என்றார், கர்தினால் சொதானோ.

கர்தினால்கள், திருத்தந்தைக்காக எப்போதும் செபிக்கின்றனர், ஒவ்வொரு நாளும் திருப்பலி நிறைவேற்றும்போது, இதை சிறப்பாக மனதில் வைக்கின்றனர் என்றும் கூறினார் கர்தினால் சொதானோ.

மேலும், தன்னோடு இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றிய, கர்தினால்களுக்கு, திருப்பலியின் இறுதியில் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த பல நாள்களாக, வயதாகி வருவது பற்றிய சிந்தனைகள் வருகின்றன, ஆயினும், முதல்முறையாக, கர்தினால்களைச் சந்தித்தபோது(மார்ச்,15,2013) கூறியதையே இப்போதும் சொல்ல விரும்புகிறேன், வயதான காலம் ஞானத்தின் இருப்பிடம் என்று தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வயதான காலம், அமைதியும், ஆன்மீகமும் நிறைந்தது எனவும், கர்தினால்களிடம், திருத்தந்தை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.