2016-12-17 16:26:00

சிறாரும், வயதானவர்களும், வருங்காலத்தை கட்டியெழுப்புபவர்கள்


டிச.17,2016. தலைமுறைகளுக்கு இடையே உரையாடல் நடத்துவதில் ஒருபோதும் தளர்ச்சியடையாமல், அன்றாட வாழ்வின் எதார்த்தத்தில் வாழ்வதற்கு, இறைவார்த்தையையும், விசுவாச வாழ்வையும் வழிகாட்டியாகக் கொண்டிருக்குமாறு, ஓர் இத்தாலிய கிறிஸ்தவக் குழுவிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் Nomadelfia குழுவின் 330 பேரை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், இச்சனிக்கிழமை நண்பகல்வேளையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சந்திப்பில், இவர்களில் சிலர், பகிர்ந்துகொண்ட அனுபவங்களின் அடிப்படையில், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

சிறாருக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும், இக்குழுவினர் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி ஊக்கப்படுத்திய திருத்தந்தை, சிறாரும், வயது முதிர்ந்தவர்களும், மனிதர்களின் வருங்காலத்தை அமைப்பவர்கள் எனவும், தலைமுறைகளுக்கு இடையே உரையாடலை ஊக்குவித்து வளர்ப்பதில் சோர்வடைய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

சிறார், வரலாறை எடுத்துச் செல்பவர்கள் எனவும், வயது முதிர்ந்தவர்கள், தங்கள் வாழ்வின் அனுபவத்தையும், ஞானத்தையும் வழங்குபவர்கள் எனவும் உரைத்த திருத்தந்தை, குழந்தை வடிவில் தம்மை வெளிப்படுத்திய கடவுள், எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் நம்மைத் தாழ்த்தவும், சமூகத்தில் நலிந்தவர்களுக்குப் பணியாற்றவும் கற்றுக்கொடுக்கிறார் என்றும் கூறினார்.

இந்த Nomadelfia குழுவை ஆரம்பித்த, அருள்பணி செனோ சால்த்தினி(Zeno Saltini) அவர்கள், இக்காலத்தில், கிறிஸ்துவின் விசுவாசமுள்ள சீடர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் என்று பாராட்டிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கைவிடப்பட்ட சிறார்க்கென, அருள்பணி செனோ சால்த்தினி அவர்களால், 1931ம் ஆண்டில், ஆரம்பிக்கப்பட்ட Nomadelfia குழு, தற்போது, நற்செய்தியின் அடிப்படையில், புதிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஆவல் கொண்டுள்ள கத்தோலிக்க தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.