2016-12-17 15:51:00

இறைவனைப் பற்றிய நினைவே சிறப்பானது, பிறந்த நாளில் திருத்தந்தை


டிச.17,2016. நினைவு என்பது, நமக்குமுன் வாழ்ந்து சென்ற, பெற்றோர், தாத்தா பாட்டிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்வின் அடையாளங்களை மட்டுமல்ல, மீட்பு வரலாறு முழுவதும், பிரசன்னமாக இருக்கின்ற, இறைவனைப் பற்றிய நினைவைக் கொண்டிருப்பதுவே, மிகவும் சிறப்பான நினைவு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை காலை, திருப்பலியில் கூறினார்.

தனது எண்பதாவது பிறந்த நாளான, டிசம்பர் 17, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள, பவுலின் சிற்றாலயத்தில், கர்தினால்களுடன் சேர்ந்து, கூட்டுத்திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இறைவனைப் பற்றிய நினைவே, கிறிஸ்தவ வாழ்வைக் குறித்துக் காட்டுவதாகவும், அவ்வாழ்வில் முத்திரை பதிப்பதாகவும் இருக்கும் என்று கூறினார்.

ஆண்டவரை விழிப்போடு எதிர்பார்க்கும் பயணத்தை, இத்திருவருகைக்காலத்தில் தொடங்கியிருக்கிறோம். இன்று, நம் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, இந்தப் பயணம், எத்துணை அழகானது என்பதையும், நம் ஆண்டவர் நம்மை ஏமாற்றவில்லை என்பதையும், அவர் வாக்கு மாறாதவர் என்பதையும் அறிய வருகிறோம் என்று, தன் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வரலாற்றிலும், நம் தனிப்பட்ட வாழ்விலும், கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருந்த வியத்தகு நேரங்களும், பாவத்தின் நேரங்களும் இருந்ததைக் காண்கிறோம், ஆயினும், ஆண்டவர், தம் கரங்களை விரித்தவண்ணம், உன் பாதையில் முன்னோக்கிச் செல் என்று, நம்மிடம் சொல்வதை உணர்ந்துள்ளோம், இதுவே கிறிஸ்தவ வாழ்வு என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை காலை, திருப்பலியில் கூறினார்.

1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, அர்ஜென்டீனா தலைநகர் புவனோஸ் அய்ரெஸ் நகரில் பிறந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.