2016-12-16 16:22:00

திருத்தந்தையின் 80வது பிறந்த நாளுக்கு மின்னஞ்சல் முகவரிகள்


டிச.16,2016. “மன்னிப்பு, இறைத்தந்தையின், மிகவும் காணக்கூடிய அடையாளம், இதையே, இயேசு, தம் வாழ்வு முழுவதும் வெளிப்படுத்த விரும்பினார்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியாயின. 

மேலும், டிசம்பர் 17, இச்சனிக்கிழமையன்று, தனது எண்பதாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, நல்வாழ்த்துச் சொல்வதற்கு உதவியாக, இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்ச், இஸ்பானியம், போர்த்துக்கீசியம், ஜெர்மானியம், போலந்து, இலத்தீன் ஆகிய மொழிகளில், மின்னஞ்சல் முகவரிகளைத் தயாரித்துள்ளது வத்திக்கான்.     

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூற விரும்புவோர், PopeFrancis80@vatican.va(ஆங்கிலம்); Papafranciscus80@vatican.va(இலத்தீன்),

PapaFrancesco80@vatican.va(இத்தாலியம்), PapaFrancisco80@vatican.va(இஸ்பானியம்/போர்த்துக்கீசியம்),PapeFrancois80@vatican.va  (பிரெஞ்ச்), PapstFranziskus80@vatican.va(ஜெர்மானியம்), PapiezFranciszek80@vatican.va (போலந்து) ஆகிய மொழிகளில் மின்னஞ்சல்கள் அனுப்பலாம். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 80வது பிறந்த நாளை முன்னிட்டு, #Pontifex80 என்ற hashtag சமூக வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்னும், இக்கிறிஸ்மஸ் காலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமையேற்று நிறைவேற்றும் திருவழிபாடுகளில் பங்கேற்க விரும்பும் கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் ஆகியோர், தயாராக இருக்கவேண்டிய நேரங்கள் மற்றும் இத்திருவழிபாடுகள் குறித்த விபரங்களை, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார் பேரருள்திரு குய்தோ மரினி (Guido Marini).

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், டிசம்பர் 24ம் தேதி இரவு 9.30 மணிக்குத் தொடங்கும் கிறிஸ்மஸ் பெருவிழா திருப்பலியில் பங்குபெறும் ஆயர்கள், அன்று இரவு 8.45 மணிக்கு, புனித செபஸ்தியார் சிற்றாலயத்திற்கு முன்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு குய்தோ மரினி.

டிசம்பர் 25, ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் பசிலிக்காவின் நடு மாடத்திலிருந்து, ஊர்பி எத் ஓர்பி என்ற, ஊருக்கும், உலகுக்குமான செய்தியையும், சிறப்பு ஆசீரையும் அளிக்கும் திருத்தந்தை, டிசம்பர் 31ம் தேதி, மாலை 5 மணிக்கு, நன்றி வழிபாட்டையும் நிறைவேற்றுவார்.

2017ம் ஆண்டு, சனவரி 6, திருக்காட்சி பெருவிழா அன்று, காலை 10 மணிக்கு வத்திக்கான் பசிலிக்காவில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவார் என்றும், இந்தக் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்வோர், அன்று காலை 9.15 மணிக்கு, புனித செபஸ்தியார் சிற்றாலயத்திற்கு முன்பாக இருக்குமாறும், கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.