2016-12-16 16:31:00

அலெப்போவில் தவிக்கும் பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள்


டிச.16,2016. சிரியாவின், அலெப்போ நகரில், அரசுப் படைகளும், புரட்சிப் படைகளும், தற்காலிகப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதையடுத்து, போர்முனையில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாக, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இடைக்காலப் போர் நிறுத்தம் அமலில் இருப்பதைப் பயன்படுத்தி, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள், மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை, இவ்வியாழனன்று, முதல்கட்ட நடவடிக்கையாக, வெளியேற்றியுள்ளனர் என்று, அச்சங்கம் (ICRC) தெரிவித்துள்ளது. 

செஞ்சிலுவை சங்கம் சார்பில், நூறு தன்னார்வப் பணியாளர்களும், பத்து மருத்துவ அவசரசிகிச்சை வாகனங்களும், பொதுமக்களை, அலெப்போவிலிருந்து வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன எனவும், போரில் காயமடைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது எனவும், அச்சங்கம் மேலும் கூறியது.

சிரியாவில், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அரசுத்தலைவர் ஆசாத்துக்கும், சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த, புரட்சிப் படைகளுக்கும் இடையே, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

செஞ்சிலுவை சங்கம், மற்றும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக, அரசுப் படைக்கும், புரட்சிப் படைகளுக்கும் இடையே, தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

எனினும், சில இடங்களில், போர் நிறுத்தத்தையும் மீறி, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெறுவதாக, செஞ்சிலுவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அலெப்போவில், போர்முனையில், ஏறக்குறைய ஐம்பதாயிரம் அப்பாவி மக்கள் சிக்கியிருப்பதாக, ஐ.நா. கூறியுள்ளது.

ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.