2016-12-15 16:12:00

வத்திக்கானில் கர்தினால்கள் ஆலோசனைக் குழு - 17வது சந்திப்பு


டிச.15,2016. மறைபரப்புப் பணி, மற்றும், பல்துறைகளின் அதிகாரப் பகிர்வு ஆகிய இரு அம்சங்களின் அடிப்படையில், திருப்பீடத்தின் அனைத்து துறைகளும் இயங்கவேண்டும் என்ற கருத்து, கர்தினால்களின் ஆலோசனைக் குழு, திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பில் பேசப்பட்டது என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

டிசம்பர் 12 இத்திங்கள் முதல், 14 இப்புதன் முடிய, C 9 என்றழைக்கப்படும் கர்தினால்களின் ஆலோசனைக்குழுவுடன் திருத்தந்தை மேற்கொண்ட 17வது சந்திப்பில், திருப்பீடத்தில் உருவாகும் மாற்றங்கள் குறித்து பேசப்பட்டது.

திருப்பீட நீதி, அமைதி அவை, நலப்பணியாளர்கள் திருப்பீட அவை, மற்றும் Cor Unum எனப்படும் பிறரன்பு அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் முழு மனித முன்னேற்றத் துறை என்ற புதிய அமைப்பு குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்றன என்று Burke அவர்கள் விளக்கினார்.

திருப்பீட தொடர்புத் துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து, இத்துறையின் தலைவர் அருள்பணி Dario Edoardo Viganò அவர்கள் கர்தினால்கள் குழுவிடம் விளக்கினார்.

C 9 கர்தினால்கள் ஆலோசனைக்குழுவின் அடுத்த சந்திப்பு, 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் செய்தித் தொடர்பாளர் Burke அவர்கள், செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.