2016-12-15 15:54:00

தென் சூடானின் வன்முறைகளுக்கு, திருப்பீடம் கண்டனம்


டிச.15,2016. அகில உலகச் சட்டங்களுக்குச் சிறிதும் மதிப்பு கொடுக்காமல், தென் சூடான் நாட்டில் நடைபெறும் வன்முறைகளை, திருப்பீடம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், இப்புதனன்று நடைபெற்ற மனித உரிமைகள் அவை கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.

"தென் சூடான் நாட்டில் மனித உரிமைகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அந்நாட்டில் புலம் பெயர்ந்துள்ள 23 இலட்சம் மக்களில், பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று குறிப்பிட்டார், பேராயர் Jurkovič.

வன்முறைகள் காரணமாக தென் சூடானைவிட்டு வெளியேறி, அருகில் உள்ள நாடுகளில் அடைக்கலம் புகுவோரில், 70 விழுக்காட்டினர், எவ்வித பாதுகாப்பும் அற்ற சிறுவர், சிறுமியர் என்பதை, பேராயர் Jurkovič அவர்கள் கவலையுடன் எடுத்துரைத்தார்.

வன்முறைகளை நிறுத்தவும், உதவி தேவைப்படுவோருக்கு பன்னாட்டு அமைப்புக்களின் உதவிகள் சென்றடையவும், உரையாடல் கலாச்சாரம் வளரவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்புக்களை, பேராயர் Jurkovič அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.