2016-12-15 16:22:00

திருத்தந்தை : மேய்ப்பர்கள் உண்மை பேச வேண்டும்


டிச.15,2016. மேய்ப்பர்கள் உண்மை பேச வேண்டும், அதேநேரம், மக்களால் என்ன கொடுக்க இயலுமோ, அப்படியே அவர்களை வரவேற்க வேண்டும் என்று,    இவ்வியாழன் காலை, திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை நிறைவேற்றிய, திருப்பலியில், திருமுழுக்கு யோவான் அவர்களை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னிடம் ஆண்டவர் என்ன கேட்டாரோ, அதற்கு விசுவாசமாக இருந்த மனிதர், திருமுழுக்கு யோவான் என்றும், இதனாலே இவர் பெரியவரானார் என்றும், இநதப் பண்பு, அவரின் போதனையிலும் விளங்கியது என்றும் கூறினார்.

திருமுழுக்கு யோவான் அவர்கள், தனது அழைத்தலுக்கும், உண்மைக்கும் விசுவாசமாக இருந்ததால், பரிசேயர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுக்கு எதிராய், அவரால், மிகக் கடுமையாய் போதிக்க முடிந்தது எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமுழுக்கு யோவான் அவர்கள், தன்னிடம் வந்த மக்களைப் புரிந்துகொண்டவராய், செயல்பட்டார் என்றுரைத்த திருத்தந்தை, மக்களின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, ஆண்டவரோடு, அவர்கள் முன்னோக்கிச் செல்வதற்கு உதவுபவர்களாக இருப்பவர்களே மேய்ப்பர்கள் என்றும் தெரிவித்தார். 

திருமுழுக்கு யோவான் அவர்களுக்கும் சந்தேகம் வந்தது, இவர், தனது அழைப்பில், பெரியவராக, உறுதியானவராக இருந்தாலும், அவரும் இருளான நேரங்களைக் கொண்டிருந்தார், இயேசுவுக்கு அவரே திருமுழுக்குக் கொடுத்திருந்தாலும், அவர் சிறையில் இருந்தபோது, இயேசு மீட்பர் பற்றிய சந்தேகம் வந்து, தன் சீடர்களை இயேசுவிடம் அனுப்பினார் எனவும் கூறினார், திருத்தந்தை.

எப்போதும் உண்மையான காரியங்களைப் பேசுவதற்கும், மேய்ப்பருக்குரிய அன்போடு, மக்களால் என்ன கொடுக்க முடியுமோ அதைப் பெறுபவர்களாகவும் வாழ்வதற்கு, ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் என, மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், “ஒவ்வொரு மனிதரின் இதயத்தின் உள்ளே மறைந்துள்ள ஆழமான ஆசைகளை நோக்கக்கூடிய கடவுளின் அன்பு, நம் வாழ்வில், எல்லாவற்றுக்கும் மேலாக, முதன்மை இடம் பெற வேண்டும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியாயின. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.