2016-12-15 16:27:00

குழந்தை இயேசு மருத்துவமனை குழுமத்தைச் சந்தித்த திருத்தந்தை


டிச.15,2016. பாங்கி பேராயரும், புதிதாக கர்தினால் பொறுப்பேற்றவருமான Dieudonné Nzapalainga அவர்கள், மத்திய ஆப்ரிக்க குடியரசைச் சேர்ந்த நோயுற்ற குழந்தைகள் 15 பேருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழன் காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தார்.

உரோம் நகரில் புகழ்பெற்ற குழந்தை இயேசு மருத்துவமனைக் குழுமத்தைச் சேர்ந்த, ஏறத்தாழ 7000 பேர், கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, திருத்தந்தையைச் சந்தித்த இந்த நிகழ்வில், நோயுற்ற குழந்தைகள் 150 பேரும் அவர்களது குடும்பத்தினரும் முதல் வரிசைகளில் இடம்பெற்றனர்.

இக்குழந்தைகளில் பலர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், ஆர்ஜென்டீனா, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகள் உட்பட, 15 நாடுகளைச் சேர்ந்த குழந்தை நோயாளிகள், திருத்தந்தையைச் சந்திக்க வந்திருந்தனர்.

திருத்தந்தையுடன் மேற்கொள்ளப்பட்ட இச்சந்திப்பில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் உட்பட சில திருப்பீட அதிகாரிகள், குழந்தை இயேசு மருத்துவமனையில் பணியாற்றும் 2500க்கும் அதிகமான ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, திருத்தந்தையை வாழ்த்தினர்.

குழந்தை இயேசு மருத்துவமனையில் அவசர மருத்துவ உதவிகளை முன்னேற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்படும் ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான நிதி உதவியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.

1869ம் ஆண்டு துவக்கப்பட்ட குழந்தை இயேசு மருத்துவமனையின் கிளைகள், தற்போது, ஜோர்டான், பாலஸ்தீனா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகள் உட்பட, உலகின் 12 நாடுகளில் இயங்கி வருகின்றன என்று, இம்மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.