2016-12-15 15:32:00

25வது நோயுற்றோர் உலக நாள் - திருத்தந்தையின் செய்தி


டிச.15,2016. நோயுற்றோரின் தேவைகளைக் குறித்து சிந்திக்கவும், அவர்களுக்கு உதவுகிறவர்களை நன்றியோடு எண்ணிப் பார்க்கவும், நோயுற்றோர் உலக நாள் நமக்கு வாய்ப்பளிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

2017ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளன்று சிறப்பிக்கப்படும் 25வது நோயுற்றோர் உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள செய்தி, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

"வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்" (லூக்கா 1:49) என்ற மரியன்னையின் சொற்களை மையக்கருத்தாகக் கொண்டு, திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியில், திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்டு, 1993ம் ஆண்டு முதல் சிறப்பிக்கப்பட்டுவரும் இந்நாளைக் குறித்து நினைவுகூர்ந்தார்.

நோயுற்றோரும், அவர்களைப் பராமரிப்போரும்,  நோயுற்றோரின் நலமாக விளங்கும் மரியன்னையை, இறைவனின் அன்பு அடையாளமாகவும், அவரது  திருவுளத்திற்கு தன்னையே கையளித்தவராகவும் காணவேண்டும் என்று, திருத்தந்தை, இச்செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

லூர்து நகரின் மசபியேல் குகையில், அன்னை மரியாவைக் கண்ட புனித பெர்னதெத்து, தன் வாழ்வை, எளியோரின் வாழ்வுக்கென அர்ப்பணித்தார் என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, அன்னை வழங்கும் அருள் மிகுந்த தருணங்கள், அயலவரின் தேவைகளை நிறைவேற்றும் அழைப்பாகவே வந்துள்ளன என்று கூறியுள்ளார்.

இவ்வாண்டு நாம் சிறப்பிக்கும் 25வது நோயுற்றோர் உலக நாளன்று, மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மற்றும் தாதியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் இறைவனின் ஆசீர் நிறைவாக கிடைக்க தான் செபிப்பதாக திருத்தந்தை இச்செய்தியில் உறுதி அளித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.