2016-12-14 16:10:00

திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி - Pax Christi பாராட்டு


டிச.14,2016. "அகிம்சை: அமைதிக்கு வழிவகுக்கும் அரசியல் முறை" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று வெளியிட்ட உலக அமைதி நாள் செய்தியை, Pax Christi என்ற அமைதி இயக்கம் ஆர்வமாக வரவேற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மறைமாவட்டங்களில் சனவரி 15ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக அமைதி நாள் கொண்டாட்டங்களுக்கு, திருத்தந்தை வழங்கியுள்ள இச்செய்தி, பெரும் உந்துசக்தியாக அமையும் என்று, இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

கத்தோலிக்கத் திருஅவையின் உயிர் துடிப்பாக விளங்கும் அகிம்சை என்ற கொள்கையை, மீண்டும் ஒருமுறை உயிர்பெற்றெழச் செய்துள்ள திருத்தந்தைக்கு, கத்தோலிக்க அகிம்சை இயக்கமும், Pax Christi இயக்கமும் தங்கள் நன்றியை வெளியிட்டுள்ளன என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் உரோம் நகரில், திருப்பீட நீதி, அமைதி அவையும்,  Pax Christi இயக்கமும் இணைந்து நடத்திய ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், வன்முறையற்ற அகிம்சை வழிகளை இவ்வுலகில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையடுத்து, கத்தோலிக்க அகிம்சை இயக்கம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட உலக அமைதி நாள், ஒவ்வோர் ஆண்டும், புத்தாண்டு தினத்தன்று கொண்டாப்படுகிறது என்பதும், இந்த உலக நாளையொட்டி, திருத்தந்தையர் சிறப்புச் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர் எனபதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.