2016-12-14 16:06:00

எந்த வன்முறையும் இறைமகனின் ஒளியை மறைக்கமுடியாது


டிச.14,2016. எந்த வன்முறையும் உலகிற்கு வரும் இறைமகனின் ஒளியை மறைக்கமுடியாது என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Daniel DiNardo அவர்கள், எகிப்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களில், எகிப்து, துருக்கி, சோமாலியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த தாக்குதல்கள் மற்றும் விபத்துக்களில் உயிரிழந்த அனைவருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சார்பில், கர்தினால் DiNardo அவர்கள், அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலங்களில் நிகழ்ந்த தாக்குதல்களும் விபத்துக்களும் வன்முறையின் இருளை பரவச் செய்தாலும், நம்பிக்கையின் ஒளி நம் நடுவே தொடர்ந்து ஒளிர்கிறது என்று கர்தினால் DiNardo அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

துருக்கியில் விளையாட்டுத் திடலுக்கு அருகே, சனிக்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 39 பேர் கொல்லப்பட்டனர், அதே சனிக்கிழமை, நைஜீரியாவில் ஒரு கோவிலின் கூரை விழுந்ததில் 160 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், ஞாயிறன்று சோமாலியாவின் மோகதீஷு நகரிலும், எகிப்தின் கெய்ரோ நகரிலும் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதல்களில், 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன. 

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.