2016-12-14 13:30:00

இரக்கத்தின் தூதர்கள் : சிலுவையால் எதிரியை எதிர்கொண்டவர்


டிச.14,2016. “தவறுகள் செய்வதைத் தடுப்பதற்கும், சிறிதளவேனும் நல்லது நடப்பதற்காக உதவிகள் செய்வதற்கும் கிடைக்கும் வாய்ப்புக்களை நான் தவறவிட்டிருந்தேன் என்றால், அன்று, அமைதியான மனதுடன் என்னால், இரவு படுக்கைக்குச் செல்ல இயலாது” என்று சொன்னவர் புனித மரிய குரூச்சிபிஸ்ஸோ தி ரோசா(St.Maria Crocifissa Di Rosa). இவர், இத்தாலியின் பிரேஷா(Brescia)வில், 1813ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி, பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். ஒன்பது பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஆறாவது குழந்தையாகப் பிறந்த இவருக்கு, திருநீராட்டின்போது சூட்டப்பட்ட பெயர் பவுலினா பிரான்செஸ்கா தி ரோசா. இவருக்கு 11 வயது நடந்தபோது, இவரது தாய், தீராத நோயினால் காலமானார். அதனால், 17வது வயதில், பள்ளிப் படிப்பை நிறுத்தி, இவரது தந்தையின் தொழிற்சாலைகள் மற்றும் அந்நகரத்திலிருந்த மற்ற தொழிற்சாலைகளில், வேலைகள் செய்யத் தொடங்கினார் இவர். இந்த வேலைகளோடு, இந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்த சிறுமிகளின் உடல் மற்றும் ஆன்மீக நலன்களிலும் கவனம் செலுத்தினார். பொருளாதார காரணத்தினால், தொழிற்சாலைகளில் அதிக நேரம் வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வதற்காக, மாதர் சங்கம் ஒன்றையும் ஆரம்பித்தார். பெண்களுக்கு ஆன்மீகத் தியானங்கள் மற்றும் பிற உதவிகளையும் செய்து வந்தார் இவர். தனது மகள் துறவு வாழ்வைத் தேர்ந்துகொள்ளக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த இவரது தந்தை, இவருக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். ஆயினும், பவுலினாவின் ஆன்மீக வழிகாட்டியின் உதவியால், அவரது திருமணம் நிறுத்தப்பட்டது.

பவுலினாவின் சேவையை ஆதரித்த இவரது தந்தை, குறைந்த ஊதியத்திற்கு வேலைசெய்யும் பணியாளர்களின், ஆன்மீக மற்றும் பொருளாதாரத் தேவைகள் மேம்பட பணியாற்றுமாறு ஊக்கமளித்தார். உள்ளூர் மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளர்களை, குறிப்பாக, ஆதரவற்ற நோயாளர்க்கு உதவி செய்வதில் அதிக நேரம் செலவிட்டார் பவுலினா. 1836ம் ஆண்டில், பிரேஷா நகரில், காலரா நோய் பரவியபோது, பவுலினாவும், கபிரியேலா பொர்நாத்தி என்ற கைம்பெண்ணும், மருத்துவமனையில், இந்நோயாளிகளுக்குப் பணிவிடை புரிந்தனர். இவர்கள் எவ்வளவு அர்ப்பணத்துடன் இப்பணியை ஆற்றினார்கள் என்றால், எதுவுமே இல்லாத, ஏழை சிறுமிகளுக்காக நடத்தப்பட்ட இல்லத்தைப் பராமரிக்கும் பொறுப்பு பவுலினாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணியை இரண்டு ஆண்டுகள் ஆற்றினார் பவுலினா. இவர் சமூகநலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். மிகுந்த இறையியல் அறிவுத்திறமையோடு பணியாற்றி வந்தார். தொழிற்சாலைகளிலிருந்து நீக்கப்பட்ட இளம் பெண்கள், குறிவைத்து தாக்கப்படுவது கண்டு, அவர்களின் வாழ்வு ஆதாரத்திற்காகத் தொடர்ந்து உழைக்க நினைத்தார் பவுலா. இதற்கு ஓர் அமைப்பு தேவை என்று உணர்ந்தார். எனவே, இப்பெண்களுக்கும், மருத்துவமனையில் துன்புறும் ஏழை நோயாளிகளுக்கும் பணியாற்றும் நோக்கத்தில், தனது 27வது வயதில், 1840ம் ஆண்டில், கபிரியேலா பொர்நாத்தியுடன் சேர்ந்து, ஒரு துறவு சபையைத் தொடங்கினார் பவுலினா. நான்கு உறுப்பினர்களைக் கொண்டு, பிறரன்பின் பணியாளர்கள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, 22 பேரைக் கொண்டு விரைவில் வளரத் தொடங்கியது.

பவுலினா அவர்கள், துறவு வார்த்தைப்பாட்டின்போது, மரிய குரோச்சிஃபிசா(Maria Crocifissa) அதாவது மேரி சிலுவை என்ற பெயரைத் தேர்ந்துகொண்டார். இந்தப் பெயரே, இவரது வாழ்வு முழுவதையும் விளக்குவதாக அமைந்தது. இவரின் ஆன்மீக வாழ்வு, சிலுவையில், கிறிஸ்து அனுபவித்த துன்பங்களை, உறுதியுடன் பின்பற்றுவதாய் இருந்தது. சிலுவையில் இயேசு அனுபவித்த பாடுகளே, அருள்சகோதரி, மரிய குரோச்சிஃபிசா அவர்களின், வாழ்வு, போதனை மற்றும் தியானத்திற்கு அடித்தளமாக அமைந்திருந்தன. துன்புறும் மனிதர்க்கு இவர் ஆற்றிய சேவையிலும் இது தெளிவாகத் தெரிந்தது. துன்புறுவோரைக் காணும்போதெல்லாம், நானும் துன்புறுகிறேன் என்று சொல்வார் அருள்சகோதரி மரிய குரோச்சிஃபிசா. முதலில், தான் கவனித்து வந்த பெண்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக ஓர் இல்லம் தொடங்கினார். பின்னர், செவித்திறன் அற்றவர்களுக்கு ஒரு பள்ளியை ஆரம்பித்தார். அரைகுறையாகக் கட்டப்பட்ட ஒரு குடிசையில் தங்கிக்கொண்டு மருத்துவமனையில் பணியாற்றினார் இச்சகோதரி.

தனது மகள் மற்றும், அவரோடு சேர்ந்த சகோதரிகள் வாழும் நிலையைக் கண்டு, அவரின் தந்தை அவர்களுக்கு ஒரு வீட்டை வழங்கினார். 1852ம் ஆண்டில், பிரேஷாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டபோது, போர் முடியும்வரை இச்சபை சகோதரிகள் இருதரப்பு வீரர்களுக்கும் பணியாற்றினர். குண்டுமழைக்கு மத்தியிலும், மெழுகுதிரிகளை ஏற்றி வைத்து, மிகுந்த பொறுமையுடன் இவர்கள் ஆற்றிய சேவை எல்லாரையும் வியக்க வைத்தது. எதிரிகளை சிலுவையால் எதிர்கொண்டார் இவர். அந்நகரில், இரண்டாவது முறை காலரா பரவியபோதும், இதே ஆர்வத்துடன் அச்சபை சகோதரிகள் பணியாற்றினர். 1840ம் ஆண்டில் சபையின் தலைவரானார் அருள்சகோதரி மரிய குரோச்சிஃபிசா. தனது சபைக்கு, 1850ம் ஆண்டில், திருத்தந்தையின் அனுமதியையும் பெற்றார். பணியின் பளுவால் நோயுற்ற அருள்சகோதரி மரிய குரோச்சிஃபிசா தி ரோசா அவர்கள், 1855ம் ஆண்டு, டிசம்பர் 15ம் தேதி, தனது 42வது வயதில் காலமானார். 1954ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி புனிதாரக அறிவிக்கப்பட்ட இவரின் திருநாள் டிசம்பர் 15.       

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.