2016-12-14 16:23:00

அரசு தலைவர் ஆசாதுக்கு திருத்தந்தை அனுப்பிய மடலுக்கு வரவேற்பு


டிச.14,2016. சிரியா நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற ஆழ்ந்த தாகத்தோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு அரசுத் தலைவர், Bashar al-Assad அவர்களுக்கு, கர்தினால் மாரியோ செனாரி அவர்கள் வழியே அனுப்பியுள்ள மடலை, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் வரவேற்றுள்ளனர் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

மடலைப் பெற்றுக்கொண்ட அரசுத்தலைவர் ஆசாத் அவர்கள், போர் காலத்தில் பல நாடுகள் தங்கள் தூதரகங்களை விட்டு வெளியேறியபோதும், வத்திக்கான் தூதரகம் அந்நாட்டில் தொடர்ந்து செயலாற்றியதற்கு தன் நன்றியைத் தெரிவித்தார் என்றும் ஆசிய செய்தி குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் திருப்பீடத் தூதர், கர்தினால் செனாரி வழியே திருத்தந்தை அனுப்பியுள்ள மடல் நம்பிக்கை தருகிறது என்றாலும், இதைத் தொடர்ந்து நிகழ்வதை, நாம் காத்திருந்து பார்க்க வேண்டும் என்று, அலெப்போவின் இலத்தீன் வழிபாட்டு முறை அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Georges Abou Khazen அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

போர்க்களமாக மாறியுள்ள அலெப்போ நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களுக்குத் தேவையான உணவு, மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் உலக அமைப்புக்களுக்குத் தேவையான பாதுகாப்பை, அரசுத்தலைவர் ஆசாத் அவர்கள் உறுதி செய்யவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டிருப்பது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பரிந்துரையாக உள்ளது என்று ஆயர் Abou Khazen அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே, அலெப்போவை மீட்கும் பணியில், அரசுப் படையினர், மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.அவை குற்றம் சுமத்தியுள்ளது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.