2016-12-13 15:34:00

குருத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அதிகாரப் போக்கு தீமையானது


டிச.13,2016. குருத்துவத்தைப் பயன்படுத்தி அதிகாரம் செய்யும் போக்குடைய மதத்தின் அறிவாளிகளுக்கு, தாழ்மையும், எளிமையும் கொண்ட விசுவாசிகள் பலியாகின்றார்கள், இந்தப் போக்கு மிகவும் மோசமானது, இது திருஅவையில் இன்றும் நிலவுகிறது என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை திருப்பலியில் கூறினார்.

தனது 47வது குருத்துவ திருப்பொழிவு நினைவு நாளான, டிசம்பர் 13, இச்செவ்வாய் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், C9 என்ற, ஒன்பது கர்தினால்கள் குழுவுடன் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குருத்துவத்தைப் பயன்படுத்தி, அதிகாரம் செய்யும் மனநிலை, தீமையானது என்று தெரிவித்தார்.

ஆயினும், மனம்திருந்தும் பாவிகளும், விலைமகளிரும், மதத்தின் இந்த அறிவாளிகளுக்கு, முன்பாக, விண்ணரசில் நுழைந்து விடுவார்கள் என்று எச்சரித்த திருத்தந்தை, மதத்தின், அறிவாளிகள், இறைவெளிப்பாட்டின்படி அல்ல, ஆனால், அறிவுசார்ந்த நன்னெறிப்படி போதிக்கின்றனர் என்றும் கூறினார்.    

தலைமைக் குருக்கள் மற்றும் மக்களின் மூப்பர்கள் பற்றிக் கூறும், இந்நாளைய நற்செய்தி வாசகத்தை(மத்.21,28-32) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, மதத்தில், இத்தலைவர்களின் பங்கு பற்றிப் பேசினார்.

இத்தலைவர்கள், சட்டம், நன்னெறி, சமயம் சார்ந்த அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர் எனவும், இவர்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றனர் எனவும், இயேசுவைத் தீர்ப்பிட்ட அன்னாஸ், கைப்பாசை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தலைமைக் குருக்கள், இலாசரைக் கொலைச் செய்யத் தீர்மானித்தனர், யூதாசிடம் பேரம் பேசினர், இயேசுவும் விற்கப்பட்டார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், பெரும் பாவம் செய்தான், ஆயினும், அவன் மனம்வருந்தி, தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சென்றான், ஆனால் அவர்களோ, இது உனது பிரச்சனையெனக் கூறிவிட்டனர் என்றும் கூறினார்.

குருத்துவத்தைப் பயன்படுத்தி அதிகாரம் செய்யும் தீமையான போக்கு, மிக அருவெறுப்பானது, இதற்கு, ஏழைகளும், தாழ்மையான மக்களும் பலியாகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, மனம்வருந்தும் பாவிகளும், விலைமகளிரும், மதத்தின் இந்த அறிவாளிகளுக்கு, முன்பாக விண்ணரசில் நுழைந்து விடுவார்கள் என, இன்று, இயேசு நம் எல்லாரிடமும் சொல்கிறார் என்று மறையுரையை நிறைவு செய்தார்.

இன்னும், திருப்பீட தலைமையகச் சீர்திருத்தத்தில், திருத்தந்தைக்கு உதவும் ஒன்பது கர்தினால்கள் குழுவின் 17வது கூட்டம், டிசம்பர் 12, இத்திங்களன்று தொடங்கியுள்ளது. C9 என்ற, இக்குழுவின் கூட்டம், டிசம்பர் 14, இப்புதனன்று நிறைவடையும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.