2016-12-13 16:06:00

ஆந்திரா, தமிழகப் பகுதிகளில் அதிகரிக்கும் கடும் புயல்கள்


டிச.13,2016. வங்கக் கடலில் அதிகரித்துவரும் வெப்பமே, ஆந்திரா, தமிழகப் பகுதிகளில், கடுமையான புயல்கள், அதிகமாக உருவாவதற்குக் காரணம் என, ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் குறித்து, 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அந்த அறிக்கை, 'எர்த் சயின்ஸ் அண்ட் கிளைமேடிக் சேஞ்ச்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகித்த அலகாபாத் பல்கலைக்கழக பேராசிரியர் அசுதோஷ் மிஸ்ரா அவர்கள், 1891ஆம் ஆண்டு முதல், 2013ஆம் ஆண்டுவரை தாக்கிய புயல்கள் பற்றிய, புள்ளிவிவரங்களைத் தொகுத்து ஆராய்ந்தபோது, மே, அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களில், தமிழகம், ஆந்திரக் கடல் பரப்பில் புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கின்றன எனக் கூறினார்.

வங்கக் கடல் பகுதியில், அண்மை காலத்தில் அதிகளவில் புயல்கள் உருவாகி வருகின்றன என்றும், முன்பெல்லாம் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், புயலாக உருவாகும், ஆனால், அவற்றின் தாக்கம் கரையைக் கடக்கும்போது, சற்று குறைவாக இருக்கும், ஆனால், தற்போது கடல் வெப்பம் அதிகரிப்பதால் தீவிரப் புயல்கள் அதிகமாக உருவாகின்றன, அவ்வாறு உருவாகும் தீவிரப் புயல்கள் பல, சற்றும் வலுவிழக்காமல் தீவிரப் புயலாகவே கரையைக் கடந்துவிடுகின்றன, இதனால், தாக்கம் அதிகரித்துள்ளது எனவும், பேராசிரியர் மிஸ்ரா அவர்கள் தெரிவித்தார்.

ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டும், வங்கக் கடலில், நவம்பர் மாதத்தில் 5 முதல் 6 புயல்கள் உருவாகின்றன எனவும், அவற்றின் வேகம் 34 நாள் என்றளவில் இருக்கிறது எனவும், சில புயல்களில் காற்றின் வேகம் இன்னும் அதிகமாக, அதாவது 48 நாள் என்றளவில் இருக்கின்றது" எனவும், அவர் கூறியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில் பெருங்கடல்களின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும், இதுவே, அடிக்கடி புயல் உருவாவதற்கு காரணமாக இருக்கின்றதாகவும், தொழில்மயமாக்குதல் கடல் வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக இருக்கின்றதாகவும், நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.