2016-12-12 16:12:00

காப்டிக் தலைவரிடம் தொலைபேசி வழி திருத்தந்தை அனுதாபம்


டிச.,12,2016. எகிப்து தலைநகரிலுள்ள காப்டிக் கிறிஸ்தவக் கோவிலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்து, ஆழ்ந்த கவலையை, இத்திங்கள் காலை காப்டிக் முதுபெரும் தந்தை போப் இரண்டாம் தவாத்ரோஸ் அவர்களிடம் தொலைபேசி வழி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முதுபெரும் தந்தைக்கும், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடுவதாக தொலைபேசி உரையாடலின்போது தெரிவித்த திருத்தந்தை, மறைசாட்சிகளின் இரத்தத்தின் வழியாக கிறிஸ்தவ சபைகள் ஒன்றுக்கொன்று இணைந்துள்ளன எனவும் கூறியதாக, திருப்பீட செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள் தெரிவித்தார்.

இத்திங்களன்று மாலை, தான் நிறைவேற்றும் குவாதலூப்பே அனனைமரி விழா திருப்பலியில், காப்டிக் கிறிஸ்தவ சமூகத்திற்காக செபிக்க உள்ளதாக, காப்டிக் கிறிஸ்தவ சபை தலைவரிடம் திருத்தந்தை உறுதியளிக்க, அதற்கு நன்றி தெரிவித்த காப்டிக் வழிபாட்டுமுறை தலைவர் போப் இரண்டாம் தவாத்ரோஸ் அவர்கள், எகிப்தில் அமைதி நிலவ செபிக்குமாறு திருத்தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.