2016-12-12 16:35:00

எகிப்து கோவில் தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம்


டிச.,12,2016. இஞ்ஞாயிறன்று எகிப்தின் தலைநகரிலுள்ள புனித மாற்கு பேராலயத்திற்கு அருகிலுள்ள புனித பேதுரு சிறு கோவிலொன்று வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டதில் 25 பேர் உயிரிழந்து 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது குறித்து கிறிஸ்தவ சபைகளும் அரசியல் அமைப்புகளும் தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

எகிப்தின் புனித மாற்கு பேராலயத்திற்கு மிக அருகிலுள்ள புனித பேதுரு ஆலயத்தில் ஞாயிறு காலை திருப்பலி இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பெண்கள் பகுதியில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதல் குறித்து கத்தோலிக்கத் திருஅவையின் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட, எகிப்து திரு அவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்பணி Rafic Greiche அவர்கள், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை சகோதரர்களுக்கு கத்தோலிக்க திரு அவை தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடுவதுடன், காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய செபிப்பதாகவும், இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் கொணரப்படவேண்டும் என விண்ணப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, எகிப்து பிரதமர் Ismail Cherif அவர்கள் இக்கோவிலுக்கு வந்து பாதிப்புகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

கிரேக்க நாட்டில் ஒரு கோவிலை திறந்து வைக்கச் சென்றிருந்த காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை போப் இரண்டாம் தவாத்ரோஸ் அவர்கள் உடனடியாக நாடு திரும்பியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.