2016-12-10 15:17:00

வருங்கால அருள்பணியாளர்கள், உறவுகளின் மனிதர்கள்


டிச.10,2016. வருங்கால அருள்பணியாளர்கள், உறவுகளின் மனிதர்களாக இருக்க வேண்டுமே தவிர, தன்னைப் பற்றிய அக்கறையிலே கவனம் செலுத்துபவராக இருக்கக் கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய குருத்துவ மாணவர்களிடம் கூறினார்.

இத்தாலியின் Puglia மாநில, திருத்தந்தை 11ம் பத்திநாதர் குருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் அம்மாநில ஆயர்கள் என, 310 பேரை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரை நிகழ்த்திய திருத்தந்தை, தன்னைப் பற்றியும், தனது தோற்றத்தைப் பற்றியுமே, அதிகமாகக் கவனம் செலுத்தும் போக்கு குறித்து எச்சரித்தார்.

இந்தப் போக்கு, அருள்பணியாளரின் திருப்பணி வாழ்வுக்குத் தடையாய் இருக்கின்றது எனவும், எதையும் முழுமையாக கிரகிக்க விரும்பும் அருள்பணியாளர், தனது வாழ்வு பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும், திருத்தந்தை, அழைப்பு விடுத்தார்.

தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால், கிறிஸ்துவை எப்படி நோக்க முடியும் என்ற கேள்வியை முன்வைத்த திருத்தந்தை, இந்தச் சோதனை குறித்து விழிப்பாய் இருந்தால் மட்டுமே, இறையழைத்தல் பயணம் இயலக்கூடியதாய் அமையும் என்றும் கூறினார். பிறரோடு உறவைக் கட்டியெழுப்பும் திறமையை வளர்த்துக்கொள்ளுமாறும், குருத்துவ மாணவர்களிடம் கூறிய திருத்தந்தை, இந்தத் திறமை, அருள்பணியாளராக ஆகிய பின்னர், பெரிதும் உதவும் என்றும் கூறினார்.

மேலும், இச்சந்திப்பில் கலந்துகொண்ட குருத்துவப் பயிற்சியாளர்களிடம், தரமான பயிற்சியளிப்பதில், அவர்களுக்கிருக்கும் பொறுப்பையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், Puglia மாநிலத் தலைவர் Michele Emiliano அவர்களையும், இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில், தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.