2016-12-10 15:34:00

யாராவது ஒருவரின் உரிமை பாதுகாக்கப்பட உழையுங்கள்


டிச.10,2016. இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக மனித உரிமைகள் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள், யாராவது ஒருவரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு, இன்றும், நாளையும், ஒவ்வொரு நாளும் முயற்சிக்க வேண்டுமென்று, உலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, மக்கள் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும் மற்றும், இந்த உரிமைகளைப் பாதுகாப்பதே, ஐ.நா.வை அடையாளம் காட்டுவதாகவும், அதன் பணியின் மையமாகவும் உள்ளது எனவும், கூறியுள்ளார் பான் கி மூன்.

உலக வரைபடத்தில் காணமுடியாதவர்களாய், சில சிறிய இடங்களில், நம் வீடுகளுக்கு மிக அருகில், உரிமை இழந்து வாழ்பவரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு, நாம் உழைக்கும்போதுதான், அனைத்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் அர்த்தம் பெறும் எனவும், பான் கி மூன் அவர்கள், தனது செய்தியில், குறிப்பிட்டுள்ளார்.

1948ம் ஆண்டில், கொண்டுவரப்பட்ட, உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை, 501 மொழிகளில் தற்போது கிடைக்கின்றது. பொலிவியா நாட்டில், ஏறத்தாழ ஒரு இலட்சத்து, 16 ஆயிரம் பூர்வீக இனத்தவர் பேசும், Quechua மொழியிலும், இந்த அறிக்கை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.