2016-12-10 16:02:00

போர்ப்பகுதிகளில், ஏறத்தாழ 535 மில்லியன் சிறார் நெருக்கடியில்


டிச.10,2016. உலகில், வன்முறை இடம்பெறும் இடங்களில், ஏறக்குறைய 53 கோடியே 50 இலட்சம் சிறார், அடிப்படை வசதிகளின்றி, கடும் துன்ப நிலைகளில் வாழ்கின்றனர் என்று, ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் கூறியது.

சிரியாவில், போர் இடம்பெறும் இடங்களில், ஏறக்குறைய ஐந்து இலட்சம் சிறாரும், வட கிழக்கு நைஜீரியாவில், ஏறக்குறைய 10 இலட்சம் சிறாரும், ஏமனில், ஏறக்குறைய ஒரு கோடிச் சிறாரும், நெருக்கடியான சூழல்களில் வாழ்கின்றனர் என்றும் யூனிசெப் கூறியது.

ஆப்கானிஸ்தானில், ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய சிறாரில், பாதிப் பேர், பள்ளிக்குச் செல்லவில்லை எனவும் கூறும் யூனிசெப், போர்ப் பகுதிகளிலும், அமைதி நிலவும் இடங்களிலும், சிறாரின் வளர்ச்சி, கேள்விக்குறியாகவே உள்ளது என்றும், யூனிசெப், கவலை தெரிவித்துள்ளது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.