2016-12-10 15:42:00

குடிபெயர்வோர், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை, பேராயர்


டிச.10,2016. OSCE என்ற, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தைச் சேர்ந்த நாடுகளில், ஒவ்வொரு மனிதருக்கும், அமைதி, பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்கின்றது என்பதை உறுதியாகச் சொல்ல இயலாமல் இருப்பது, கவலை தருகின்றது என, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

OSCE நிறுவனத்தின் 57 உறுப்பு நாடுகள் மற்றும் அந்நிறுவனத்தோடு தொடர்புடைய, 11 நாடுகளின், வெளியுறவு அமைச்சர்கள் நடத்திய, 23வது அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வெள்ளியன்று, உரையாற்றிய, பன்னாட்டு உறவுகள் திருப்பீடச் செயலகத்தின் செயலர் பேராயர் ரிச்சர்டு காலகெர் அவர்கள் இவ்வாறு கூறினார்.

கடந்த கால மற்றும், நிகழ்காலப் போர்கள், கலவரங்கள், பயங்கரவாதம் போன்றவற்றுக்கு, எண்ணிக்கையற்ற நம் சகோதர சகோதரிகள் பலியாவதை, பார்த்து வருகிறோம் என்று தெரிவித்தார் பேராயர் காலகெர். மேலும், போர்கள் மற்றும், பொருளாதார நெருக்கடிகளால், புலம்பெயரும் மக்களை, ஐரோப்பிய நாடுகள், எவ்வித ஒதுக்கீடுமின்றி, வரவேற்க வேண்டுமெனவும், பேராயர் காலகெர் அவர்கள், கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதம், சிரியாவில் போர், ஆயுதப் பயன்பாடு, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலில், உரையாற்றிய போராயர் காலகெர் அவர்கள், புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோர், ஒரு நாட்டின்  நிலையான தன்மைக்கும், பாதுகாப்புக்கும், அச்சுறுத்தலாக நோக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

ஜெர்மனியின் Hamburg நகரில், இவ்வியாழன், இவ்வெள்ளி(டிசம்பர் 8,9) ஆகிய இரு தினங்களில் இந்த இரண்டு நாள் கூட்டம் நடந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.