2016-12-10 15:08:00

இயற்கையோடு உறவை இழக்காதவர், இறைவனோடு உறவை இழக்காதவர்


டிச.10,2016. இயற்கையோடு இரக்கம்நிறை உறவை இழக்காதவர், படைத்தவரோடும் உறவை இழக்காமல் இருப்பார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, விவசாயக் குழு ஒன்றிடம்  கூறினார்.

பன்னாட்டு கத்தோலிக்க கிராமக் கழகத்தின் (ACRI) அறுபது பிரதிநிதிகளை, வத்திக்கானின் கன்சிஸ்ட்டரி அறையில் சந்தித்து, தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, வேளாண்மையில், இலாபம் ஈட்ட வேண்டுமென்ற நோக்கத்தில், அதனோடு ஒன்றித்த வாழ்வைத் தியாகம் செய்துவிட வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.

திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் அடிப்படையில், கிராம வாழ்வு குறித்து, ACRI கழகம் அக்கறை எடுத்து வருவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, பொருளாதாரத்தின் முக்கியப் பிரிவில், வேளாண்துறை, தற்போது முன்னுரிமை பெறாவிட்டாலும், வளர்ச்சித்திட்ட கொள்கைகளில், இத்துறை, தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றது என்றும் கூறினார்.

இக்கழகத்தின் பயிற்சித் திட்டங்கள், உள்ளூர் நிலைமைகளை மையப்படுத்தி, தனிமனிதரின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்றும், இவை, உற்பத்தியில், பொருள்கள் வீணாக்கப்படுவகைத் தவிர்க்கின்றன என்றும், அமோக அறுவடைக்காக இடம்பெறும் நவீன தொழில்நுட்பங்களை, இத்திட்டங்கள் அகற்ற முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.  

பணத்திற்காக வேளாண்மையைப் பலியாக்க வேண்டாமென்றும் கூறிய திருத்தந்தை, இன்று உலகில், மனிதரின் நலவாழ்வில் நாம் சந்திக்கும் அரிய நோய்கள் பற்றியும் சிந்தித்துப் பார்க்குமாறும் கூறினார்.

இவ்வுலகில் இடம்பெறும் பயங்கரமான அநீதிகளுக்கு, மௌன சாட்சிகளாக ஒருபோதும் மாறக் கூடாது என்றும், வேளாண்துறையினரைப் பரிந்துரைத்த திருத்தந்தை, இயற்கையோடு உறவை இழக்காதவர், இறைவனோடும் உறவை இழக்காதவர் என்றும் கூறினார்.

ACRI என்ற, கத்தோலிக்க விவசாயிகளைக் கொண்ட இப்பன்னாட்டு கழகம், சுற்றுச்சூழல், வேளாண்மையின் சமூக மற்றும், பொருளாதார நிலைத்த தன்மையை ஊக்குவித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.