2016-12-09 15:29:00

திருத்தந்தை: இறை அன்பை மக்களுக்குக் கொணரும் ஒரு பாலம்


டிச.09,2016. இறைவனின் அன்பை மக்களுக்குக் கொணரும் ஒரு பாலமாக இருக்கவேண்டியவர், அருள் பணியாளர் என்றும், அவர் தன் சுயத் தேவைகளில் கவனம் செலுத்துபவர் அல்ல என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலையில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், தன் நடத்தையைக் குறித்து குறை கண்ட மக்களைப் பற்றி, இன்றைய நற்செய்தியில், இயேசு குறிப்பிடுவதை அடிப்படையாகக் கொண்டு, அருள் பணியாளர்களைக் குறித்து மறையுரை வழங்கினார், திருத்தந்தை.

சுயத் தேவைகள், இலாபங்கள் இவற்றில் கருத்தாக இருக்கும் அருள்பணியாளர்கள், எப்போதும் திருப்தியற்று வாழ்கின்றனர் என்றும், அன்றாட வாழ்வை நிறைவுடன் வாழ்வதற்குப் பதில், அடுத்து என்ன செய்யலாம் என்ற திட்டங்களிலேயே அவர்கள் நாள்கள் கழிகின்றன என்றும், தன் மறையுரையில் விளக்கினார், திருத்தந்தை.

அருள் பணியாளர்கள், குழந்தைகளோடு இருக்கும் நேரத்தில், அவர்களது உண்மை நிலை வெளிப்படுவதை தான் கண்டிருப்பதாகக் கூறியத் திருத்தந்தை, உள்மனச் சுதந்திரத்துடன் வாழும் அருள்பணியாளர்கள், குழந்தைகளுடன் குழந்தையாக மாறுவதையும், தங்களைப் பற்றியே சிந்திப்பவர்கள், குழந்தைகள் நடுவே, சோகத்துடன் இருப்பதையும் காண முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

புனிதர்களான போலிகார்ப், பிரான்சிஸ் சேவியர் மற்றும் திருத்தூதர் பவுல் ஆகியோரை, அருள் பணியாளர்களின் எடுத்துக்காட்டாகக் கூறியத் திருத்தந்தை, அவர்கள் வாழ்விலிருந்து சில நிகழ்வுகளையும், கூற்றுக்களையும் எடுத்துரைத்து, தன் மறையுரையை நிறைவு செய்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.