2016-12-08 16:04:00

"பிறரை நல்வழியில் ஈர்ப்பதன் வழியே திருஅவை வளர்கிறது"


டிச.08,2016. டிசம்பர் 8 இவ்வியாழன் மாலை உரோம் நகரின் நடுவே அமைந்துள்ள அன்னை மரியாவின் திருஉருவத்திற்கு தான் வணக்கம் செலுத்தச் செல்லும் வேளையில், தன்னுடன் மக்கள் அனைவரும் செபத்தில் ஒன்றித்திருக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 8, அமல அன்னை திருநாளன்று, உரோம் நகரின் இஸ்பானிய சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு திருத்தந்தையர் சென்று, மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்துவது வழக்கம்.

இந்த வழக்கத்தைப் பின்பற்றி, இவ்வியாழன் பிற்பகல் 4 மணியளவில் இந்த வணக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்வதாக தன் நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் கூறியத் திருத்தந்தை, தன்னுடன் செபத்தில் இணைந்திருக்க அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

மேலும், அமல அன்னை திருநாளன்று, தங்கள் வாழ்வையும், பணிகளையும் புதுப்பிக்கும் இத்தாலிய கத்தோலிக்கக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு, மூவேளை செப உரையின் இறுதியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை.

"இறைவனின் கொடைகளைப் பெறுவதற்கேற்ற பணிவான உள்ளத்தைக் கொண்டிருக்க, அன்னை மரியாவிடம் கற்றுக்கொள்வோமாக" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

"பிறரை மதம் மாற்றுவதால் அல்ல, மாறாக, அவர்களை நல்வழியில் ஈர்ப்பதன் வழியே திருஅவை வளர்கிறது" என்ற கருத்தை தன் டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.