2016-12-08 16:28:00

குடிபெயர்வோர் அனைத்துலக நிறுவனத்தில் பேராயர் உரை


டிச.08,2016. உள்நாட்டு மோதல்கள், பஞ்சம், மத சித்ரவதைகள், தட்பவெப்ப நிலை மாற்றம், இயற்கைப் பேரழிவு, என்பனவற்றிலிருந்து தப்பி, பாதுகாப்பான‌ வாழ்வைத் தேடிச் செல்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருவதாக ஐ.நா. அவையில் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருப்பீட உயர் அதிகாரி, பேராயர் Ivan Jurkovič.

ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. அலுவலகத்தின் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் Jurkovič அவர்கள், குடிபெயர்வோர் அனைத்துலக நிறுவனமான IOMல் உரையாற்றியபோது, இந்நாட்களில், குடிபெயர்வோரின் எண்ணிக்கையும், பாதுகாப்பான இடங்களைத்தேடி அலைவோரின் உயிரிழப்புகளும், அதிகரித்துள்ளது குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

71 ஆண்டுகளில், முதன் முறையாக, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றதாரர்களின் பாதுகாப்பு குறித்த நியூ யார்க் ஒப்பந்தம் இந்த ஆண்டில் கையெழுத்திடப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிடும் அதேவேளை, இந்த ஆண்டில் மட்டும் 6000க்கும் மேற்பட்ட குடியேற்றதாரர்கள், வேறு நாடுகளுக்கு குடிபெயரும் முயற்சியின்போது உயிரிழந்துள்ளதையும் மறைக்க முடியாது என்றார், பேராயர் Jurkovič.

தங்களிடம் வரும் குடிபெயர்வோரை சமூகத்தின் ஓர் அங்கமாக பல நாடுகள் ஏற்றுக்கொள்ளாதபோது, அங்கு நம்பிக்கையின்மையும் சந்தேகமும் பிறக்கிறது என்று கூறியப் பேராயர், இத்தகையக் கலாச்சாரம் மாற்றியமைக்கப்பட்டு, உரையாடலுடன் கூடிய கலாச்சாரம் ஊக்குவிக்கப்படவேண்டும் என்றார்.

சமூகத்தின் ஒருபகுதியாக குடிபெயர்வோரை ஒன்றிணைக்கும்போது அதன்மூலம் வளர்ச்சிக்கு வித்திடப்படுகிறது என்பதையும் வலியுறுத்தினார், பேராயர் Jurkovič.

சிறார் குடியேற்றதாரர் குறித்தும் திருப்பீடத்தின் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட பேராயர்,  2017ம் ஆண்டின், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றதாரர் நாளுக்கென  திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, சிறார் குடியேற்றதாரருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

உலகம் முழுவதும், போர்களினால் 24 கோடியே 60 இலட்சம் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும், அவர்களின் உரிமைகள் பல்வேறு சூழல்களில் மீறப்படுவதையும், அனைத்துலக குடியேற்றதாரர் அமைப்பில் எடுத்துரைத்தார், பேராயர் Jurkovič. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.