2016-12-08 16:07:00

ஒவ்வோர் ஆண்டும், 100,000 கோடி டாலர்கள் இலஞ்சம்


டிச.08,2016. 2030ம் ஆண்டுக்குள் உலகெங்கும் அமைதியும், வளமும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற இலக்குகளை உறுதி செய்வதற்கு, நம்மிடையே நிலவும் ஏமாற்று சக்திகள் பெரும் தடையாக உள்ளன என்று ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.

டிசம்பர் 9, இவ்வெள்ளியன்று கடைபிடிக்கப்படும் ஊழல் எதிர்ப்பு உலகநாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், ஏமாற்று சக்திகளை அப்புறப்படுத்த அனைவரும் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் உலகில், ஒரு இலட்சம் கோடி டாலர்கள், அதாவது, ஏறத்தாழ 68 இலட்சம் கோடி ரூபாய் இலஞ்சமாக வழங்கப்படுகின்றன என்றும், 2.6 இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள செல்வம், ஊழல் காரணமாக திருடப்படுகின்றது என்றும் ஊழல் எதிர்ப்பு உலகநாளையொட்டி, ஐ.நா. அவை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.

ஊழல், இலஞ்சம் ஆகிய ஏமாற்று வழிகளில் திருடப்படும் செல்வம், உலக சமுதாயம் உழைத்து சேர்க்கும் செல்வத்தில் 5 விழுக்காடு என்றும், இச்செல்வம் தகுந்த வழிகளில் பயன்படுத்தப்பட்டால், உலகெங்கும், கல்வி, மருத்துவ வசதிகள் மற்றும் வளமான எதிர்காலம் அனைவருக்கும் உருவாகும் என்றும், ஐ.நா.வின் இவ்வறிக்கை கூறுகிறது.

"ஊழலுக்கு எதிராகவும், முன்னேற்றம், அமைதி, பாதுகாப்பு இவற்றை உறுதிசெய்யவும் இணைவோம்" என்பது, 2016ம் ஆண்டின் ஊழல் எதிர்ப்பு உலக நாளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையக் கருத்து. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.