2016-12-07 17:11:00

"குடிபெயர்ந்தோர் ஐரோப்பாவை சக்திமிகுந்ததாகச் செய்கின்றனர்"


டிச.07,2016. ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள பல்லாயிரம் குடிபெயர்ந்தோர், பல ஆண்டுகள் அங்கு வாழ்ந்தபின்னரும், ஐரோப்பிய சமுதாயத்தில் முற்றிலும் இணைக்கப்படவில்லை என்று, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளது.

"நல்வரவு - குடிபெயர்ந்தோர் ஐரோப்பாவை சக்திமிகுந்ததாகச் செய்கின்றனர்" என்ற தலைப்பில், ஐரோப்பிய காரித்தாஸ் வெளியிட்டுள்ள ஒரு நூலில், குடிபெயர்ந்தோர் சந்திக்கும் பல தடைகள், வெளிச்சமிட்டு காட்டப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் மனிதர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பை விட, அவர்களிடம் உள்ள ஆவணங்களுக்கு அதிகம் மதிப்பு உள்ளது என்றும், ஆவணங்கள் இல்லாதோர் மனிதர்களே அல்ல என்று கூறுமளவு நடத்தப்படுகின்றனர் என்றும் செனெகல் நாட்டிலிருந்து வந்துள்ள ஒருவர் கூறியுள்ளது, இந்நூலில் பதிவாகியுள்ளது.

குடிபெயர்ந்தோர் சந்திக்கும் பல தடைகளை எளிதில் நீக்கமுடியும் என்று கூறும் இந்நூல், ஐரோப்பாவின் 13 நாடுகளில் பின்பற்றப்படும் 21 செயல்முறைகளை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளது.

கலாச்சாரம், சமுதாயக் கட்டுமானம், சமுதாய, பொருளாதார நிலை என்ற மூன்று வழிகளில் குடிபெயர்ந்தோர் ஐரோப்பிய சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் வழிகள், பரிந்துரைகளாக இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.