2016-12-07 15:08:00

இரக்கத்தின் தூதர்கள் : ஏழைகளின் குறைதீர்க்கும் புனிதர்


டிச.07,2016. ஒரு சமயம், ஏழை ஒருவர், தனது மூன்று பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்குப் போதிய பொருள்வளம் இன்றி வருந்தினார். பணம் சேர்ப்பதற்கு, வேறு வழி தெரியாமல், அப்பிள்ளைகளைப் பாவ வாழ்வு வாழ வைத்து, அதன் வழியாகப் பணம் திரட்ட முடிவு செய்தார். அச்சமயத்தில், ஒரு மனிதர், தனது பெற்றோர் தனக்கு விட்டுச்சென்ற சொத்துக்களை ஏழைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனவே அந்த ஏழைப் பெண்கள் குடும்பத்திற்கு உதவுவதற்கும் திட்டமிட்டார். அந்தக் குடும்பத்தினருக்குத் தெரியாமல், மூன்று பைகளில், தங்கத்தை நிறைத்து, அவற்றை, அடுத்தடுத்து மூன்று இரவுகள், அவ்வீட்டின் ஜன்னல் வழியே எறிந்தார். கடைசியாக எறிந்தபோது, இந்தச் செயலைச் செய்த வள்ளலை, அந்த ஏழைத் தந்தை கண்டுபிடித்தார். தன்னையும், தனது மகள்களையும் கடும் பாவத்திலிருந்து காப்பாற்றியதற்கு அந்த மகானுக்கு நன்றி தெரிவித்தார் அந்தத் தந்தை. தனது பாவ எண்ணத்திற்காக, மன்னிப்பையும் அவர் இறைஞ்சினார்.

ஏழைகளுக்கு உதவிய இந்த மகான்தான் புனித நிக்கோலாஸ். இவரின் இந்த உதவும் பண்பை வைத்து, இவர், கிறிஸ்மஸ் காலத்தில், சிறார்க்கு, பரிசுப்பொருள்களை வழங்கும் சாந்தா கிளாஸ் என்றும் நோக்கப்படுகிறார். புனித நிக்கோலாஸ், 270ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, துருக்கி நாட்டின் பத்தாரா எனும் ஊரில், நல்ல பக்தியுள்ள கத்தோலிக்கப் பெற்றோருக்குப் பிறந்தார். சிறுவயது முதலே செபத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், ஏழைகளுக்கு உதவி செய்வதை, தனது பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டார். ஒருமுறை மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், இவரிடம் வந்து தனது கையைத் தொடுமாறு கேட்டார். இவரும் தொட்டார். அப்பெண்ணும் முழுவதும் குணமடைந்தார். இதனால் இவரை, விந்தைகள் ஆற்றுபவர், புதுமைகள் செய்பவர் எனவும் அழைக்கின்றனர். நிக்கோலாசுக்கு 15 வயது நடந்தபோது, இவரது பெற்றோர் கொள்ளை நோயால் இறந்தனர். அதன்பிறகு, இவர், துறவு மடத்தில் சேர முடிவெடுத்தார். அதனால் தனது சொத்துக்களை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். குருத்துவப் பயிற்சி முடித்த இவர், குருவாக அருள்பொழிவு பெற்றார். அதன்பின்னர், ஒரு துறவு இல்லத்தின் தலைவராக இவரை நியமித்தார் அப்பகுதி ஆயர். அங்குச் சிலகாலம் இருந்த பின்னர் புனிதபூமி நோக்கிப் திருப்பயணம் மேற்கொண்டார் நிக்கோலாஸ்.

பின்னர் புனித பூமியிலிருந்து, தனது துறவு இல்லத்திற்குச் செல்வதற்கு, கப்பலில் பயணம் செய்தார். அப்போது, கடலில் புயலும் காற்றும் அதிகமாக வீசியதால் நிக்கோலாஸ் பயணம் செய்த கப்பல், துருக்கி நாட்டின் மீரா என்ற நகரில் கரை சேர்ந்தது. அக்கப்பல் அங்குச் சேர்வதற்கு முந்திய நாள்தான் மீராவின் ஆயர் இறந்திருந்தார். எனவே, புதிய ஆயரைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைவரும் கூடி இருந்தனர். அப்போது தூய மனிதர் ஒருவர், புதிய ஆயருக்காக நோன்பிருந்து செபிப்போம் என்றார். அந்த இரவு அவர் ஒரு கனவு கண்டார். அதிகாலையில் நிக்கோலாஸ் என்பவர் ஆலயத்திற்கு வருவார். அவரை ஆயராகத் திருப்பொழிவு செய்யுங்கள் என்று வானதூதர் கனவில் அறிவுறுத்தினார். மறுநாள் நிக்கோலாசும் ஆலயத்திற்கு வந்தார். அவரும், மீரா நகர் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

புனித நிக்கோலாஸ் பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஒருமுறை, மாலுமிகள் கப்பலில் சென்றுகொண்டிருந்தனர். திடீரென கடலில் புயல் அடித்தது. உயிருக்குப் போராடிய மாலுமிகள், நிக்கோலாஸ், இறைவனின் ஊழியரே, உம்மைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டது உண்மை என்றால், எங்களைக் காப்பாற்ற வாரும் என்று குரல் எழுப்பினர். நிக்கோலாசும் அங்கு வந்து அந்த மாலுமிகளைக் காப்பாற்றினார். மேலும், தியோக்கிளேசியன் பேரரசர் உரோமையை ஆட்சி செய்த காலத்தில், கிறிஸ்தவர்களை மிகவும் துன்புறுத்தினான். எண்ணற்றோரைச் சிறையில் அடைத்தான். அவ்வாறு சிறை சென்றவர்களில் புனித நிக்கோலாசும் ஒருவர். ஐந்து ஆண்டுகள் இவர் சிறையில் இருந்தார். பின்னர், கான்ஸ்ட்டைன் பேரரசராக ஆட்சிக்கு வந்த பின்னர், புனித நிக்கோலாஸ் விடுதலையடைந்து மீண்டும் மீராவின் ஆயராகப் பணியைத் தொடர்ந்தார்.

ஒருமுறை நிக்கோலாஸ் வாழ்ந்த பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஒரு சரக்குக் கப்பல் கோதுமையுடன், துறைமுகத்தில் வந்து நின்றது. நிக்கோலாஸ் அங்குச் சென்று, பசியால் வாடும் மக்களுக்கு கோதுமை கொடுக்குமாறு கேட்டார். ஆனால், அக்கப்பல், கான்ஸ்ட்டைன் பேரரசருக்குச் சொந்தமானது. கோதுமை குறைந்தால், எங்களுக்குப் பிரச்சனை என்றார்கள். இல்லை கொடுங்கள், உங்களுக்கு எதுவும் குறைபடாது என்றார் புனித நிக்கோலாஸ். அவர்களும் அவ்வாறு கொடுக்க கோதுமையின் அளவு குறையவில்லையாம். இப்படி, புனித நிக்கோலாஸ் பல புதுமைகளைச் செய்திருக்கிறார். இவர்,  343ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார். இவர் தனது இறப்புக்குப் பின்னரும் பல புதுமைகளை ஆற்றியிருக்கிறார். இப்புனிதர், உதவி தேவைப்படும் எல்லாருக்கும் உதவுபவர். இவரின் விழா டிசம்பர் 06.

ஒருமுறை செல்வந்தர் ஒருவருக்குப் பிள்ளைப்பேறு இல்லை. புனித நிக்கோலாசிடம் அச்செல்வந்தர் செபித்தார். குழந்தை பிறந்தால் ஒரு தங்கக் கிண்ணத்தை அவரின் கல்லறையில் காணிக்கையாக்குவதாக உறுதி கொடுத்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தார். தங்கக் கிண்ணத்தையும் செய்தார் செல்வந்தர். ஆனால் அது அவருக்குப் பிடித்திருந்ததால், அவர் அதை காணிக்கையாக்கவில்லை. பின்னர் இரண்டாவது கிண்ணம் செய்து, அதை காணிக்கையாக்க மகனுடன் கப்பலில் புறப்பட்டார். மகன் முதல் கிண்ணத்தில், நீர் நிரப்பியபோது அவன் கடலில் விழுந்துவிட்டான். அவனைக் காணவில்லை. பின்னர் இரண்டாவது கிண்ணத்துடன் புனித நிக்கோலாசின் கல்லறைக்கு வந்து செலுத்தினார். ஆனால் அந்தக் கிண்ணம், அவரை மீண்டும் மீண்டும் அடித்துத் தள்ளியது. அந்நேரத்தில், முதல் கிண்ணத்துடன் அவரின் மகன் அங்கு வந்தான். பின்னர், இரண்டு தங்கக் கிண்ணங்களையுமே அச்செல்வந்தர் காணிக்கையாகச் செலுத்தினார் என்று சொல்லப்படுகின்றது.

தேவையில் இருப்போருக்கு உதவும் புனித நிக்கோலாஸ் அவர்களின் வழியை நாமும் பின்பற்றலாமே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.