டிச.06,2016. பல்சமய உரையாடல்கள் ஒவ்வொன்றும், அமைதியான உலகைக் கட்டியெழுப்புவதற்கு, உதவுவதாய் அமைய வேண்டுமென்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார்.
“அமைதியின் ஒளி : உரையாடலில் கிறிஸ்தவர்களும், இந்துக்களும்” என்ற தலைப்பில், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், இச்செவ்வாயன்று நடந்த ஒருநாள் கருத்தரங்கில், தொடக்கவுரையாற்றிய கர்தினால் Tauran அவர்கள், கிறிஸ்தவர்களும், இந்துக்களும், அமைதியின் தூதர்களாகவும், பொதுநலனைக் கட்டியெழுப்புவர்களாகவும் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
இக்கருத்தரங்கின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Tauran அவர்கள், இத்தாலியிலும், மற்ற பகுதிகளிலும் வாழ்கின்ற, இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே, உரையாடல் மற்றும் நட்புணர்வில், அமைதியின் ஒளி, ஒளிர வேண்டுமென்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.
திருப்பீட பல்சமய உரையாடல் அவை, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகம், இத்தாலிய ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும், பல்சமய உரையாடல் பணிக்குழு, இத்தாலிய Santana Dharma Samgha அமைப்பு, ஃபோக்கோலாரே கத்தோலிக்க அமைப்பு, அமைதிக்கான மதங்களின் இத்தாலிய தேசிய அமைப்பு ஆகிய அனைத்தும் இணைந்து, இக்கருத்தரங்கை நடத்தின.
“தாராளமயமாக்கப்பட்ட ஓர் உலகில், அமைதியை ஊக்குவித்தல்”, “உரையாடலில் இறைவன்” போன்ற தலைப்புக்களில், சொற்பொழிவுகளும் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், பரதம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |