2016-12-06 16:05:00

உலகளாவிய வளங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், திருப்பீடம்


டிச.06,2016. உலகளாவிய வர்த்தகம் குறித்த, ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்கை எட்டுவதற்கு, நாடுகள், உலகளாவிய ஒப்பந்தங்களை செயல்படுத்துவதும், அவைப் பலனளிப்பதற்கு, தங்களை அர்ப்பணிப்பதும் இன்றியமையாதவை என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. கூட்டமொன்றில் கூறினார்.

UNCTAD என்ற, ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஜெனீவாவில், உலகளாவிய வர்த்தகம் குறித்து நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், இவ்வாறு கூறினார்.

உலகளாவிய தாராளமயமாக்கலில், வெற்றி பெறுபவர் யார், தோல்வியடைபவர் யார் என்பதை கணக்கிட்டுக்கொண்டிராமல், வளங்களைப் பகிர்வதில், உலக சமுதாயம், திட்டவட்டமான செயல்களில் இறங்க வேண்டுமென்று வலியுறுத்தினார் பேராயர் Jurkovič.

2030ம் ஆண்டின் இலக்குகள், வெற்றியடைய வேண்டுமெனில், நீடித்திருக்கக்கூடிய நிலையான வளர்ச்சியை நோக்கி, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில், முதலீடுகள்    செய்யப்பட வேண்டும் எனவும், ஐ.நா. கூட்டத்தில் கூறினார் பேராயர் Jurkovič.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.