2016-12-05 16:13:00

நம் சுதந்திரத்தை கடவுள் பறித்துக்கொள்வதில்லை


டிச.,05,2016. 'இறையரசு நமக்கு அருகில் உள்ளது, அது நம்மிடையே உள்ளது, இதுவே கிறிஸ்தவ மறைப்பணியின் மையக்கருத்து' என இஞ்ஞாயிறன்று தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனந்திரும்புவதற்கு புனித திருமுழுக்கு யோவான் விடுக்கும் அழைப்புப் பற்றிக் கூறும் திருவருகைக் காலத்தின் இந்த இரண்டாவது ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் எடுத்தியம்பியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  'இறையரசு நெருங்கியுள்ளது, மனந்திரும்புங்கள்' என்ற புனித திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளையே, இயேசுவும் தன் கலிலேயப் பணியின்போது பயன்படுத்துவதைக் காண்கிறோம், என்றார்.

இறையரசு என்பது மரணத்திற்குப் பின் வரும் ஓர் இடம் அல்ல, மாறாக, இயேசு கொணரும் நற்செய்தி எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வரலாற்றிலும் நம் வாழ்விலும் இயேசு கொண்டுவர விரும்பும் இந்த அரசின் ஒரு பகுதியாக நாம் மாறவேண்டுமெனில், நம் வாழ்வில் மாற்றத்தைக் கொணர வேண்டும், அதுவே மனந்திரும்புதல் ஆகும் எனவும் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகின் கொள்கைகளை, அதாவது எவ்விலை கொடுத்தும் வெற்றியைப் பெறுவது, பலவீனமானவர்களை சுரண்டி அதிகாரத்தை கைப்பற்றுவது, இவ்வுலக சொத்துக்களுக்கான தாகம், எவ்விலை கொடுத்தும் சுகங்களைப் பெறுவது போன்றவற்றைக் கைவிட்டு, இறைவனின் வருகைக்கான பாதையை நாம் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நம் சுதந்திரத்தை கடவுள் நம்மிடமிருந்து பறித்துக்கொள்வதில்லை, மாறாக,  நமக்கு உண்மையான மகிழ்வைக் கொடுக்கிறார், ஏனெனில் நம்மை, சுயநலன்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும், ஊழல்களிலிருந்தும் விடுவிக்கும் நோக்கிலெயே அவர் நம்மிடையே குடிகொள்ள வந்தார் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்குத் தயாரிக்கும் விதமாக, நம்மை ஆன்ம ஆய்வுக்கு உட்படுத்தி, நம் பாவங்களை அறிக்கையிடுவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.