2016-12-05 16:19:00

கத்தோலிக்கப் பணிகளுக்காக இலங்கை அதிபர் பாராட்டு


டிச.,05,2016. இலங்கையின் ஏழைகள் மற்றும் பின்தங்கியோரின் நிலைகளை சமூக அளவில் முன்னேற்ற, கத்தோலிக்கத் திருஅவை எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக அவர்களை பாராட்டுவதாக தெரிவித்தார், இலங்கை அரசுத் தலைவர், மைத்ரிபாலா சிறிசேனா.

கத்தோலிக்கர்களை மட்டுமல்ல, இலங்கை மக்கள் அனைவரையும் வழிநடத்துவதற்கு கல்வியறிவு மிக்க, பெரும் கத்தோலிக்கத் தலைவர்கள் கிடைத்தது, இலங்கை நாட்டிற்கு கிடைத்த பெரிய ஆசீர் என, தன்னை சந்தித்த ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறினார், அரசுத் தலைவர் சிறிசேனா.

இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற ஆசிய ஆயர் பேரவையின் 11வது நிறையமர்வுக் கூட்டத்தை முன்னிட்டு, இலங்கை வந்திருந்த, 40 நாடுகளின் 140க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் சார்பாக FABC எனும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித், மற்றும், இலங்கைக்கான திருப்பீடத் தூதர், பேராயர் Pierre Nguyen Van Tot ஆகியோரை  சந்தித்த வேளையில், இப்பாராட்டுக்களை வெளியிட்டார், அரசுத் தலைவர் சிறிசேனா.

பல்வேறு மதங்களையும் பல கலாச்சாரங்களையும் கொண்டுள்ள இலங்கையின் இத்தகையப் பாரம்பரியம், பல நூற்றாண்டுகள் பழமையானது என்ற இலங்கை அரசுத்தலைவர், நாடு முழுவதும் கிராமங்களிலும், நகர்களிலும், புத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களைக் காணமுடியும் என கத்தோலிக்கத் தலைவர்களிடம் கூறினார்.

ஆதாரம் :  AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.