2016-12-03 15:21:00

பொருளாதார வளர்ச்சியில், எல்லாத் தரப்பினரும் சேர்க்கப்பட..


டிச.03,2016. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட மக்களை ஒதுக்காமல், எல்லாத் தரப்பினரையும் இணைப்பதற்கு, உறுதி வழங்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, இந்தியக் கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தியக் கிறிஸ்தவர்களின் உலகளாவிய அவைத் தலைவர் சாஜன் ஜார்ஜ் அவர்கள், பிரதமர் மோடி அவர்களுக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில், ஊழல், பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மை, சிறுபான்மை மதங்களோடு பிரச்சனை போன்ற கடும் விவகாரங்களால், நாடு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நிலவும் 500, 1000 ரூபாய் தாள்கள் பிரச்சனையின் பாதிப்பையும் சுட்டிக்காட்டியுள்ள, சாஜன் ஜார்ஜ் அவர்கள், நாற்பது விழுக்காட்டு இந்தியர்கள், வங்கிகளைப் பயன்படுத்துவதில்லை எனவும், இந்தப் பிரச்சனையில், ஏழைகளும், சமூகநலப் பணிகளில் பணியாற்றும் நிறுவனங்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.

இலட்சக்கணக்கான குடிமக்களுக்கும், சிறுதொழில் முனைவோருக்கும், தங்கள் தொழில்களை நடத்துவதற்கு, அரசின் உதவி தேவைப்படுகின்றது எனவும், புதிய ஆண்டு வளம் பெறுவதற்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், எல்லாத் தரப்பினரும் இணைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் சாஜன் ஜார்ஜ்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.