2016-12-03 15:28:00

திருவருகைக்காலச் சிந்தனை – வியாபார கிறிஸ்மஸ் வேண்டாம்


"அவசரப்பட்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை ஆரம்பிக்காதீர்கள், தயவுசெய்து, டிசம்பர் 24 இரவு வரை காத்திருங்கள்" என்று அமெரிக்க ஆயர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன், தன் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் மடலை அனுப்பினார்.

ஆயர் அவர்கள், இவ்வாறு சொன்னதற்குக் காரணம் என்ன? அமெரிக்காவில், ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் மாதத்தின் 4வது வியாழன், ‘நன்றியறிதல் நாள்’ என்று கொண்டாடப்படும். இறைவன் அளித்த நல்ல அறுவடைக்கு நன்றி சொல்லும் நாளாக, இந்நாளை, மக்கள் கொண்டாடிவந்தனர். ஆனால், வியாபார உலகம், விரைவில், இந்நாளை, ஒரு விடுமுறை கொண்டாட்டமாக மாற்றிவிட்டது. தற்போது, இந்த நன்றியறிதல் நாள், எவ்வித மத உணர்வும் இன்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழா முடிந்த கையோடு, வியாபார உலகம், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைத் துவக்கிவிடும். வியாபார உலகம் ஆரம்பித்து வைக்கும் இந்த கிறிஸ்மஸ் விழாவை, ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடச்சொல்லி, விளம்பரங்கள் தூண்டிவிடும். இந்தத் தூண்டுதலுக்கு இணங்க, ஒரு மாத அளவு கொண்டாடிவிட்டால், டிசம்பர் 24ம் தேதி இரவு, உண்மையான கிறிஸ்மஸ் வரும்போது, நாம் அனைவரும் களைத்துப் போய்விடுவோம் என்ற அக்கறையுடன், ஆயர் அவர்கள், அந்த எச்சரிக்கையைத் தந்தார். களைத்துமட்டும் போய்விட மாட்டோம், கலைந்தும் போய்விடுவோம். வியாபார உலகம் விரிக்கும் மாய வலைக்குள் அகப்பட்டு, ஒவ்வொரு திருநாளின் உட்பொருளை விட்டுக் கலைந்து, வேறு வழிகளில் நம் மனங்கள் சிந்திக்கின்றன என்பது, வேதனையான உண்மை.

கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மைப் பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம், திருவருகைக் காலம். வீட்டு அலங்காரம், புத்தாடைகள், வண்ண விளக்குடன் கூடிய விண்மீன்கள், கிறிஸ்மஸ் மரம், பரிசுகள் என்று, விளம்பரங்கள் விரித்துள்ள வலையில் சிக்கி, இத்திருவருகைக் காலத்தை நாம் ஆரம்பித்திருந்தால், அந்த வலையிலிருந்து விடுதலை பெற்று, உண்மையான கிறிஸ்மஸ் விழாவின் பொருளை உணர முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.