2016-12-03 14:52:00

திருத்தந்தை : இன்றைய உலகம் பதட்டநிலைகளால் நிறைந்துள்ளது


டிச.03,2016. இன்றைய உலகம் பதட்டநிலைகளால் நிறைந்திருந்தாலும், நம்பிக்கையின் கீற்றுகளும் தெரிகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நூற்றுக்கணக்கான தொழில் அதிபர்களிடம், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

Fortune, TIME ஆகிய இரு இதழ்களும் இணைந்து, “21ம் நூற்றாண்டு சவால் : தாக்கங்களை உருவாக்கும் புதிய ஒப்பந்தங்களை நோக்கி..” என்ற தலைப்பில், உரோம் நகரில் நடத்திய இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரை நிகழ்த்திய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இன்றைய உலகில், மக்கள் மத்தியில் சமத்துவமற்ற நிலை தொடர்ந்து விரிந்துகொண்டே செல்கின்றது என்றும், போர், வறுமை மற்றும் இவற்றால் மக்கள் புலம்பெயர்ந்தல் போன்ற காரணங்களால், பல சமூகங்கள் நேரிடையாகப் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும், இம்மக்கள்  தங்களின் அச்சங்களையும், கவலைகளையும் வெளிப்படுத்துகின்றனர் என்றும், இவர்கள் தங்களின் குரல் கேட்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மக்களின் நம்பிக்கையாக, இந்தப் பிரதிநிதிகள் உள்ளனர் என்றும், உலக அளவில் நிலவும் அநீதிகளைக் களைவதே, நமது பெரிய சவால் என்றும் கூறிய திருத்தந்தை,  அநீதிகளைக் களையும் முயற்சிகளில், எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

நம் நிறுவனங்கள் மற்றும், பொருளாதார அமைப்புக்களை மாற்றுவதற்கு, Fortune-TIME உலகளாவிய அமைப்பு தொடங்கியுள்ள பணிகள், தொடர்ந்து இடம்பெறுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இந்த முயற்சியில், இவர்கள் எதிர்பார்க்கும் மக்களிடமிருந்து உதவி கிடைக்கட்டும் என வாழ்த்தினார்.

Fortune Live Media மற்றும் TIME நிறுவனம் நடத்திய இக்கருத்தரங்கில், Fortune நிறுவனத்திலிருந்து 500 பேர் மற்றும் TIME நிறுவனத்திலிருந்து 100 பேர் கலந்துகொண்டனர் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகமதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், வளங்கள் பரந்த அளவில் பகிரப்படல், வறுமையை ஒழிப்பதற்கு நீடித்த, நிலையான நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, இந்த நிறுவனங்கள், இம்முயற்சியில் இறங்கியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழ்மையை ஒழிப்பதோடு தொடர்புடைய, தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகள், உணவு, தண்ணீர், சுற்றுச்சூழல், எரிவாயு போன்ற தலைப்புக்கள், இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.