2016-12-03 15:03:00

குடும்பங்கள், உண்மையான நற்செய்தி பள்ளிகள், கர்தினால் டோப்போ


டிச.03,2016. நற்செய்தியின் மகிழ்வை, ஒருவர் ஒருவருடன் பகிர்ந்துகொள்வதற்கு கற்றுக்கொள்ளும் இடமாக அமைந்துள்ள குடும்பங்கள், நற்செய்தியின் உண்மையான பள்ளிகள் எனவும், உண்மையான அன்பில், இரக்கத்தின் மிக அழகான குழு உருவாகின்றது எனவும், திருத்தந்தையின் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

இலங்கையின் நெகோம்போவில் நடந்துவரும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின்(FABC) 11வது கூட்டத்தில், திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பங்குபெறும், இராஞ்சிப் பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ அவர்கள், குடும்பத்தில் நிலவும் விசுவாசமே, அதன் உறுப்பினர்களுக்கு, இயேசுவைப் பின்செல்லக் கற்றுக் கொடுக்கின்றது என்று கூறினார்.  

ஆசியத் திருஅவை, கத்தோலிக்கக் குடும்பங்களின் ஆழமான விசுவாசத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின்றது எனவும், இல்லத் திருஅவையே, கடவுளின் இரக்கத்தையும், பரிவன்பையும் பரப்பும் முக்கிய கருவி எனவும் கூறினார் கர்தினால் டோப்போ.

டிசம்பர் 04, இஞ்ஞாயிறன்று நிறைவடையும் இக்கூட்டத்தில், ஏறக்குறைய 40 நாடுகளிலிருந்து, கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் என, 140க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். திருத்தந்தையும், இக்கூட்டத்திற்கு, செய்தி அனுப்பியிருந்தார். 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.