2016-12-03 15:36:00

அமைதிக்கான விருதை வென்ற சிறுமி கேகாஷன்


டிச.03,2016. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, அரபு ஐக்கிய குடியரசில் வாழ்கின்ற 16 வயது நிரம்பிய சிறுமி கேகாஷன் பாசு(Kehkashan Basu) அவர்கள், குழந்தைகளுக்கான உலக அமைதி விருதை வென்றுள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலராகிய கேகாஷன் பாசு அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக, அரபு ஐக்கிய குடியரசு உட்பட, பல நாடுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

சிறுமி கேகாசன் பாசு அவர்களின் இந்தச் செயலை பாராட்டும் வகையில், அவருக்கு குழந்தைகளுக்கான உலக அமைதி விருது, நெதர்லாந்தில் உள்ள ஹாக் நகரத்தில் இவ்வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

இவ்விருதைப் பெற்றுக்கொண்டபின், ஊடகங்களிடம் பேசிய கேகாஷன் அவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடத்தப்படும், உலகளாவியப் பேச்சுவார்த்தைகளில், இளையோரும் பங்கேற்க நேரடி வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.  

"ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக, எது நேர்ந்தாலும் உங்களது நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள் என்றும், சில அரசியல் தலைவர்களால் தடங்கல் இருந்தாலும் தொடர்ந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராகச் செயல்படுங்கள்" என்றும் கூறினார் கேகாஷன்.

சுற்றுச்சூழல் தொடர்பான இந்த ஆர்வத்துக்கு காரணமாக, கொல்கத்தாவில் உள்ள தனது பாட்டி வீட்டின் மாடி தோட்டத்தைக் குறிப்பிட்டார் கேகாஷன்.

கேகாஷன் பாசு தன்னுடைய 12 வயதில் ’கீரின் ஹோப்’என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, அதன்மூலம் பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்களை, செயல்படுத்தி வருகிறார். இந்தத் தொண்டு நிறுவனத்திற்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர்.

இந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலம் மெக்சிகோ, கொலம்பியா, பிரான்ஸ், ஒமன், நேபாளம் ஆகிய நாடுகளில் ஐந்தாயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன.

இத்துடன் கடலோரத்தில் இருக்கும் வனப் பகுதிகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார் கேகங்ஷன் பாசு. சுற்றுச்சூழல் பிரச்சனைகள், ஒவ்வோர் ஆண்டும் முப்பது இலட்சம் குழந்தைகளின் இறப்புக்குக் காரணமாக அமைகின்றது

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.