2016-12-02 15:33:00

பியாரிஸ்ட் சபையினருக்கு திருத்தந்தை வாழ்த்துச் செய்தி


டிச.02,2016. நவம்பர் 27, இஞ்ஞாயிறன்று யூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ள, பியாரிஸ்ட் அருள்பணியாளர் சபையினருக்கு, வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சபையின் தலைவர் அருள்பணி Pedro Aguado Cuesta அவர்களுக்கு, செய்தி   அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறார் மற்றும் இளையோர்க்கு, குறிப்பாக, வறியவர்களுக்கு, இலவசக் கல்வி வழங்குவதற்காக, திருஅவையில் முதன்முதலில் தங்களை அர்ப்பணித்தவர்கள் என்று, இச்சபையினரைப் பாராட்டியுள்ளார்.

கடந்த நூற்றாண்டில், இச்சபையை ஆரம்பித்த Joseph Calasanz அவர்களின் நோக்கத்தை அங்கீகரித்த திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், அவரின் இறப்பின் மூன்றாம் நூற்றாண்டு மற்றும், அவர், அருளாளராக அறிவிக்கப்பட்டதன் இரண்டாம் நூற்றாண்டு நிறைவின்போது, அவரை, அனைத்து கிறிஸ்தவப் பள்ளிகளுக்கும் விண்ணகப் பாதுகாவலராக அறிவித்தார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இறையாட்சிக்கு ஒத்திணங்கும் வகையில், மக்களின் இதயங்களை மாற்றும் நற்செய்தி அறிவிப்பு, எக்காலத்தையும்விட இக்காலத்திற்கு, அதிகம் தேவைப்படுகின்றது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இந்த யூபிலி ஆண்டில், இச்சபையினர், தங்களின், புதிய பெந்தக்கோஸ்து அனுபவத்தை வாழுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பயஸ் பள்ளிகள் என்ற இச்சபை, ஒரு துறவு சபையாகச் செயல்படத் தொடங்கப்பட்டதன் 400ம் ஆண்டு மற்றும், இச்சபையை ஆரம்பித்த Joseph Calasanz  அவர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 250ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இச்சபையினர், 2016ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி முதல், 2017ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி வரை, யூபிலி ஆண்டை அறிவித்துள்ளனர்.

இறைவனின் அன்னையின் ஏழை அருள்பணியாளர்கள் அல்லது பியாரிஸ்ட்ஸ் என்றழைக்கப்படும் இச்சபையினர், இச்சபையைத் தொடங்கிய புனித Calasanz அவர்களின் பெயரில், Calasanctian  சபையினர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

திருத்தந்தை 5ம் பவுல் அவர்களின் அனுமதியுடன், 1617ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, புனித Joseph Calasanz  அவர்கள், 14 பேருடன் புதிய சபை ஒன்றைத் தொடங்கினார். 1621ம் ஆண்டு, நவம்பர் 18ம் தேதி, திருத்தந்தை 15ம் கிரகரி அவர்கள், இச்சபையை, பயஸ் பள்ளிகள் சபை, என்றழைத்து, இதை ஒரு துறவு சபையாக உயர்த்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.