2016-12-02 15:44:00

திருத்தந்தை, உருகுவாய் அரசுத்தலைவர், ஜான் கெர்ரி சந்திப்பு


டிச.02,2016. உருகுவாய் நாட்டு அரசுத்தலைவர் Tabaré Ramón Vázquez Rosas, அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயலர் John Forbes Kerry ஆகிய இருவரையும், இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து, உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்துப் பேசினார் உருகுவாய் அரசுத்தலைவர் Vázquez Rosas.

திருப்பீடத்திற்கும், உருகுவாய் நாட்டுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், மனிதரின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தில், குறிப்பாக, மனித உரிமைகளை மதித்தல் மற்றும், சமுதாய அமைதியில், இவ்விரு தரப்பினரின் பொதுவான முயற்சிகள், உருகுவாய் சமுதாயத்தில், மனித முன்னேற்றம், தேவையில் இருப்போருக்குப் பணிகள் போன்றவற்றுக்கு, கத்தோலிக்க நிறுவனங்கள் ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவை குறித்து, இச்சந்திப்புக்களில் கலந்துரையாடினர் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.  

மேலும், நாட்டின் அரசியல் நிலவரம், சனநாயகத்தை அமைப்பதில் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தென் அமெரிக்காவின், சமூக மற்றும் மனிதாபிமானத்தின் நிலை ஆகியவை குறித்தும், இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று, அச்செய்தித் தொடர்பகம் கூறியது.

உருகுவாய் அரசுத்தலைவர் Vazquez Rosas அவர்களிடம், நாற்பது நிமிடங்களுக்கு மேல் உரையாடிய திருத்தந்தை, நற்செய்தியின் மகிழ்வு(Evangelii gaudium), இறைவா உமக்கே புகழ்(Laudato si’), அன்பின் மகிழ்வு(Amoris laetitia) ஆகிய தனது மூன்று திருமடல்களையும், ஒரு பதக்கத்தையும் பரிசாக அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.