2016-12-01 15:44:00

கைதிகளால் எழுதப்பட்ட நூல், திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது


டிச.01,2016. "மன்னிப்படைய தாகம்" (Sete di Perdono) என்ற தலைப்பில், சிறைக்கைதிகள் தங்கள் அனுபவங்களை தொகுத்துள்ள ஒரு நூலை, வின்சென்ட் டி பால் அவையினர், நவம்பர் 28, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பரிசாக அளித்தனர். 

சிறப்பு யூபிலி ஆண்டின் வெற்றிக்காக உழைத்த தன்னார்வப் பணியாளர்களின் பிரதிநிதிகள், தலைவர்கள், மற்றும், அமைப்பாளர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்தபோது, வின்சென்ட் டி பால் அவையின் தலைவர், Antonio Gianfico அவர்கள் திருத்தந்தையிடம் இந்நூலை வழங்கினார்.

சிறைக்கைதிகள் தனக்கு இந்த நூலை வழங்கியது, தன் உள்ளத்தை அதிகம் தொட்டதென்று திருத்தந்தை Gianfico அவர்களிடம் கூறினார்.

வின்சென்ட் டி பால் அவையும், இத்தாலிய நீதித் துறையும் இணைந்து, கைதிகள் நடுவே ஏற்பாடு செய்த ஒரு போட்டியில், கைதிகள் தங்கள் அனுபவங்களை, குறிப்பாக, மன்னிப்பின் வழியே தாங்கள் அடைந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

80 சிறைகளிலிருந்து 166 கைதிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், Diego Zuin என்ற கைதி முதல் பரிசையும், Simone Benenati என்பவர் 2வது பரிசையும், Domenico Auteritano என்பவர், 3வது பரிசையும் பெற்றனர்.

மன்னிப்பு குறித்து கைதிகள் பலரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களின் தொகுப்பு, "மன்னிப்படைய தாகம்" என்ற நூலாக, இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இறுதியில் வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.