2016-12-01 15:46:00

எய்ட்ஸ் உலக நாளையொட்டி, திருத்தந்தையின் விண்ணப்பம்


டிச.01,2016. எய்ட்ஸ் நோயினால் துன்புறும் பல கோடி மக்களில், பாதி பேருக்கும் மேலாக, இந்நோயிலிருந்து அவர்களைக் காப்பாற்றக்கூடிய மருத்துவ வசதிகள் இன்றி வாழ்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

டிசம்பர் 1, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட எய்ட்ஸ் உலக நாளையொட்டி திருத்தந்தை விடுத்த விண்ணப்பத்தில், இந்த நோயைத் தடுக்கவும், இந்நோயினால் துன்புறுவோரைக் காக்கவும் உலக அரசுகள் இன்னும் தீவிரமாக முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எய்ட்ஸ் மற்றும் HIV நோயைக் குறித்த விளக்கங்களும், இந்நோயைக் கட்டுப்படுத்தும், குணப்படுத்தும் வழிகளும் அதிகரித்துள்ள இன்றைய நாள்களிலும், இந்தியாவில், இந்நோய் குறித்த விழிப்புணர்வு, இன்னும் அதிக அளவில் தேவைப்படுகிறது என்று, கோவாவில் பணியாற்றும் அருள்பணியாளர், Lino Florindo அவர்கள், UCAN செய்தியிடம் கூறினார்.

HIV நோயுற்ற 23 மாணவர்களை தன் பள்ளியில் இணைத்தபோது, அப்பகுதியில் வாழும் பெற்றோர், எதிர்ப்பு தெரிவித்ததோடு, தங்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றனர் என்றாலும், பள்ளியிலிருந்து அம்மாணவர்களை தாங்கள் விலக்கவில்லை என்பதை அருள்பணி Florindo அவர்கள், தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.